தமிழ்நாடு

tamil nadu

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கவலை.. மாநகராட்சியில் நடப்பது என்ன?

By

Published : May 25, 2023, 9:10 AM IST

வேலூர் மாநகராட்சியில் பணிகள் சரிவர நடக்கவில்லை எனவும், அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை எனவும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் - வேலூர் திமுக மாமன்ற உறுப்பினர்களே கடும் வாக்குவாதம்
அரசு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் - வேலூர் திமுக மாமன்ற உறுப்பினர்களே கடும் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சியில் பணிகள் சரிவர நடக்கவில்லை எனவும், அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை எனவும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்

வேலூர்: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில், நேற்று (மே 24) மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, துணை மேயர் சுனில், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிலைக்குழு மண்டல குழுத் தலைவர்கள் பேசுகையில், “வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. பாதாள சாக்கடை பணிகள் முடித்து சாலைகள் போடப்படாமல் உள்ளது.

மேலும், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போர்வெல்கள் பழுதாகிய நிலைக்கு தள்ளப்பட்டு பல மாதங்கள் ஆகியும், அவைகள் சீர் செய்யபடாமல் உள்ளது. சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் பழுதாகியும், ஓட்டையாகியும் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

இந்த பிரச்னைகள் குறித்து பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், அவர்கள் மெத்தனமாக செயல்படுகின்றனர். மேலும், மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக குப்பைகள் அகற்றபடாமல் பல வார்டுகளில் துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் பல வார்டுகளில் பல முறை ஆய்வு செய்தும், அங்கு எந்த பணிகளுக்கும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை” என தெரிவித்தனர். அதிலும், வேலூர் மாநகராட்சியின் 1வது திமுக வார்டு உறுப்பினர் அன்பு, “என்னுடைய வார்டு பொதுமக்கள், பல்வேறு பிரச்னைகள் குறித்து என்னிடம் கூறினாலும், அவை அனைத்தையும் யாரிடம் முறையிடுவது என எனக்கு தெரியவில்லை.

எனது வார்டில் உள்ள 117 தெருக்களில், 50 தெருக்களில் மழைநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை” என கூறினார். அதேபோல், 12வது வார்டு திமுக உறுப்பினர் சரவணன், “வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் நுழைவு வளைவு அமைத்து, அதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

அது மட்டுமல்லாமல், 25வது வார்டு திமுக உறுப்பினர் கணேஷ் ஷங்கர், “சத்துவாச்சாரி பகுதிகளில் நாய், பன்றிகள் ஆகியவை இதுவரை பிடிக்கப்படாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, மாநகராட்சி அலுவலர்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

இவ்வாறு அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டால் கோபம் அடைந்த அதிகாரிகளுக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறியதால், கூட்டம் நிறைவடைந்தது. இருப்பினும், ஆளும் திமுக மாமன்ற உறுப்பினர்களே அரசு அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 44 திமுக உறுப்பினர்கள், 7 அதிமுக உறுப்பினர்கள், 1 பாஜக உறுப்பினர் மற்றும் 8 பிற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 31வது வார்டு உறுப்பினர் சுஜாதா வேலூர் மாநகராட்சி மேயராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:100 மாமன்ற உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே கலந்து கொண்ட மதுரை மாநகராட்சிக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details