தமிழ்நாடு

tamil nadu

சாலைக்காக பலநாள் கோரிக்கை; சேற்றில் சிக்கிய அமைச்சர் கார்!

By

Published : Oct 22, 2020, 6:22 AM IST

வேலூர்: மலை கிராமத்தில் சேற்றில் சிக்கிய அமைச்சரின் காரை மூன்று மணி நேரம் கயிறு கட்டி டிராக்டர் மூலம் மீட்டனர்.

சேற்றில் சிக்கிய அமைச்சர் கார்
சேற்றில் சிக்கிய அமைச்சர் கார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள பீஞ்சமந்தை மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி வந்திருந்தார். இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக சாலை அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்து வருகின்றனர். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு துறைகளின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஞ்சமந்தை மலைக்கு செல்லும் சாலையில் மணல் அடித்து சமன் செய்து சீரமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமைச்சர், அலுவலர்கள் மலையை விட்டு கீழே இறங்கியபோது மழையினால் மணல் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறியது. கிராமத்தில் இருந்து சிறிது தூரம் இறங்கியதும் சகதி நிறைந்த ஒரு பெரிய ஏற்றம் ஒன்று இருந்ததால் வழியில் சென்று கொண்டிருந்த கார், இருசக்கர வாகனம் என அனைத்தும் நகர முடியாமல் சிக்கிக்கொண்டன.

சேற்றில் சிக்கிய அமைச்சர் கார்

பின்னர் நீண்ட நேரம் முயற்சித்தும் காரை மீட்க முடியாமல் காவல்துறையினர், வனத்துறை அலுவலர்கள் திணறி வந்தனர். நிலைமையை உணர்ந்த அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் போன்றோர் தங்களது காரில் இருந்து வெளியே வந்து சூழ்நிலையை பார்வையிட்டனர்.

சிறிது தூரம் நடந்து அவ்வழியே சேற்றை கடந்து சென்று மற்றொரு காரில் அமைச்சர், ஆட்சியர் ஏறி மலையை விட்டு கீழே இறங்கினர். இருவரும் சென்ற பிறகு சேற்றை கடக்க முடியாத கார்களை கயிறு கட்டி டிராக்டர் மூலம் இழுத்து மீட்டனர். இதனால் ஏனைய துறை அலுவலர்கள் மலையை கடக்க சுமார் மூன்று மணி நேரம் காலதாமதமானது.

சாலை வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் வேண்டி வந்த நிலையில் இன்று ஆட்சியாளர்களும் அந்த துன்பத்தை அனுபவித்திருப்பதாக மலை கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கண்ணீர் வரவழைத்த வெங்காய விலை; இறக்குமதிக்கு தளர்வளித்த மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details