தமிழ்நாடு

tamil nadu

ஆளும்கட்சியினரை வட்டமிடும் அமலாக்கத்துறை.. எம்பி கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 12:22 PM IST

MP Kathir Anand: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், திமுகவைச் சேர்ந்த எம்.பியுமான கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.

Enforcement Department summoned MP Kathir Anand to appear the investigation
கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை

வேலூர்:தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து வருமான வரித்துறையினர், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில், அந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கம் உள்பட சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, அந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி கதிர் ஆனந்தின் நெருங்கிய உறவினர் வீடு, சிமெண்ட் கிடங்கு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடியை பறிமுதல் செய்தனர். இதனால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், அந்தத் தொகுதிக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக புகார் கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணையை நடத்தி வந்தது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் தொகுதி திமுக எம்.பியான கதிர் ஆனந்திடம் விசாரணை செய்யும் வகையில், அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழைப்பாணையில், வருகிற நவம்பர் 28ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என குறிப்பிட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பணமோசடி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details