தமிழ்நாடு

tamil nadu

'திமுகவிற்கு தேர்தலை சந்திக்க பயம்' - எடப்பாடி பழனிசாமி பரப்புரை

By

Published : Feb 10, 2022, 6:56 AM IST

திமுகவிற்கு தேர்தலை சந்திக்க பயம் என வேலூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'திமுகவிற்கு தேர்தலை சந்திக்க பயம்' - எடப்பாடி பழனிசாமி
'திமுகவிற்கு தேர்தலை சந்திக்க பயம்' - எடப்பாடி பழனிசாமி

வேலூர் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.9) தனியார் திருமண மண்டபமொன்றில் நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே உயர் கல்வி பெறுவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த செலவில் உயர் கல்வி வழங்கப்பட்டு வந்தது.

நீர்நிலைகளை தூர்வாரி நீரைத் தேக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதனால் ஆண்டுக்கு 541 மாணவர்கள் இன்று (பிப்.9) மருத்துவம் பயின்று வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தானிய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. இதற்காக ஒன்றிய அரசிடமிருந்து 5 விருதுகளை தமிழ்நாடு பெற்றது.

கரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 10 மாத காலம் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. மேலும் அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு மூன்று வேளையும் 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. அதிமுக என்றும் சிறுபான்மை இன மக்களுக்காக தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

கொள்ளை அடிக்கும் திமுக?

அதிமுக கொள்கையிலிருந்து என்றும் மாறாது. சக்கரம் போல் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதனால் அப்பாவி மக்களை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது. அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. ஆனால் இன்று திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகிறது.

வேலூரில் திமுகவினரால், அதிமுகவினரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு, வாக்குப் பெட்டி வைக்கும் இடம், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை கேமராவில் பதிவு செய்ய வேண்டும். வேலூரில் திமுகவினரால் அதிமுகவினர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.

திமுகவினர் கொள்ளை அடிப்பதற்காக ஆட்சிக்கு வந்துள்ளனர், மக்களை காப்பாற்றுவதற்காக அல்ல. திமுகவிற்கு தேர்தலை சந்திக்க பயம் வந்துவிட்டது. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்களை திமுவினர் மிரட்டிக் கொண்டுள்ளனர். பொங்கல் தொகுப்பு கொடுத்த நிகழ்ச்சியில் திமுகவினர் கலந்து கொள்ளவில்லை ஓடி, ஒளிந்து கொண்டனர்.

விளம்பர பிரியர் ஸ்டாலின்

பொங்கல் தொகுப்பு மக்களுக்காக கொடுக்கப்படவில்லை, ஊழல் செய்வதற்காக கொடுத்துள்ளனர். ரூ.500 கோடியில் பொங்கல் தொகுப்பு கொடுத்ததற்கு பதிலாக, ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். காவல்துறையினர் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர். அவரை தினமும் நாம் டிவியில் பார்க்கலாம். தமிழ்நாடு மக்கள் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நம்பி ஓட்டுப் போட்டார்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியை தெரிவித்ததை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை" என்றார்.

இதையும் படிங்க:பட்ஜெட் 2022 :வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி; தென்னிந்தியாவுக்கு வஞ்சனை - கதிர் ஆனந்த் எம்.பி., பேச்சு

ABOUT THE AUTHOR

...view details