தமிழ்நாடு

tamil nadu

கொள்ளையடித்த பணத்தில் மாந்திரீக பயிற்சி! மாட்டிக் கொண்ட ஹெல்மெட் திருடன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 9:56 AM IST

Updated : Sep 27, 2023, 10:03 AM IST

குடியாத்தத்தில் இரண்டு ஆண்டுகளாக ஹெல்மெட் அணிந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடனை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் பிடித்தனர். திருடிய பணத்தில் மாந்திரீகம் கற்று வந்ததாக கொள்ளையன் கூறியது போலீசாரையே அதிரச் செய்தது.

cctv footage
மாட்டிக் கொண்ட மாந்திரீகத் திருடன்

மாட்டிக் கொண்ட மாந்திரீகத் திருடன்

வேலூர்:குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். குடியாத்தம் காவல் துறையினர் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சிசிடிவி காட்சி பதிவில் நபர் ஒருவர் கொள்ளை சம்பவம் நடந்த இடங்களுக்கு இரவு நேரத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வருவது தெரிய வந்தது. பின்னர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் குடியாத்தம் அடுத்த கல்லூர் மதுராம்பிகை நகரைச் சேர்ந்த நேதாஜி (வயது 38) என்பதும் தற்போது எர்த்தாங்கல் புதூர் பகுதியில் குடியிருப்பதும் தெரியவந்தது.

மேலும், நேதாஜி தனது இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருப்பதாக குடியாத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகாமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் நேதாஜியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

நேதாஜியிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், கடந்த இரண்டு வருடங்களாக திருட்டு மோட்டார் சைக்கிளில் பூட்டிய கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும், திருடிய பொருட்கள் மற்றும் பணத்தில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து பெரம்பளூர் பகுதியில் மாந்திரீகம் கற்றுக் கொண்டதும் தெரியவந்தது.

இரண்டு வருடங்களாக வீட்டிலேயே மாந்திரீகம் செய்வதாகவும், திருட்டுக்கு செல்லும் முன் வீட்டில் மண்டை ஓடு எலும்பு கூடுகள் வைத்து சிறப்பு பூஜை செய்து அதன் பின்னரே திருட்டுக்கு செல்வதாகவும் நேதாஜி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், காவல் துறையிடம் பிடி படாமல் இருக்கவும், தடயங்கள் கிடைக்காமல் இருக்க விபூதி, குங்குமம் தூவி விட்டு எலுமிச்சை பழத்தையும் போட்டுவிட்டு வருவதாக நேதாஜி கூறியதாக போலீசார் கூறினர்.

திருடிய பணத்தில் வீட்டிற்கு தேவையான டிவி, பிரிட்ஜ், போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. அதன்பின் நேதாஜி வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், லேப்டாப், பிரிட்ஜ், டிவி, மின் விசிறி, குத்துவிளக்கு, எவர்சில்வர் பொருட்கள் அனைத்தையும் குடியாத்தம் போலீசார் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!

Last Updated : Sep 27, 2023, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details