தமிழ்நாடு

tamil nadu

ஆண்டுதோறும் டூவீலர் விபத்தால் 4,000 பேர் மரணம்: காவல்துறை கூறும் அறிவுரை என்ன?

By

Published : Jun 25, 2023, 2:52 PM IST

திருச்சி மணப்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இருசக்கர வாகன பேரணியை டிஎஸ்பி ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் டூவீலர் விபத்தால் 4,000 உயிரிழப்புகள் - காவல் துறை அறிவுறுத்தல்
ஆண்டுதோறும் டூவீலர் விபத்தால் 4,000 உயிரிழப்புகள் - காவல் துறை அறிவுறுத்தல்

திருச்சி மணப்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இருசக்கர வாகன பேரணியை டிஎஸ்பி ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருச்சி:தமிழ்நாட்டில் இருசக்கர வாகனம் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளால் வாகன ஓட்டிகளுக்கு உயிரிழப்பும், கை கால் முறிவு போன்றவைகளும் நிகழ்கின்றன. அதிலும் குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் செல்வதாலேயே அதிகளவில் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

இந்த விபத்துகளால் உயிரிழப்பு மட்டுமல்லாது பல குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலைகள் வறுமை கோட்டுக்கு கீழே சென்று விடுகின்றன. இதனால் மத்திய, மாநில அரசுகளால் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்த சட்டத்திற்கு உட்பட்டு சாலை விதியை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத் தொகையை சமீபத்தில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் காவல் துறையினர் தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்து ‘தலைக்கவசம் உயிர் கவசம்’ என்ற தலைப்பின் கீழ் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று (ஜூன் 25) திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட இருசக்கர வாகன பேரணியை மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது மணப்பாறை காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக மணப்பாறை ரவுண்டானா பகுதியில் முடிவடைந்தது. இந்த பேரணியின்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

பின்னர், இந்த பேரணியின் முடிவில் மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன் பேசுகையில், “தமிழ்நாட்டில் நாள்தோறும் சாலை விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் இருசக்கர வாகன விபத்து மூலம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பொதுமக்கள் முறையாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டினால் விபத்துக்கள் குறைக்கப்படும். புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்கும்போது ஒரு தலைக்கவசத்தை இருசக்கர வாகன விற்பனையாளர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

ஆனால், அதனைப் பயன்படுத்தாமல் வீட்டில் வைத்துக் கொள்வது அல்லது உறவினர்களிடம் விற்று விடுவது என்பது போன்ற செயலில் ஈடுபடாமல், தலையில் அணிந்து உங்களது உயிரை காப்பாற்றி, உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காவல் துறை மூலம் இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேசன், ஜேசிஐ அமைப்பினர் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:"சென்னையில் அதிவேகம் வேண்டாம்!" காரணத்தை தெரிஞ்சுக்கோங்க

ABOUT THE AUTHOR

...view details