தமிழ்நாடு

tamil nadu

“மகளிர் இடஒதுக்கீடு ஒரு கண்துடைப்பு நாடகம்” - எம்பி திருச்சி சிவா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 9:18 PM IST

திருச்சி காஜாமலையில் உள்ள ஈ.வெ.ரா கல்லூரியில் நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா வெறும் கண்துடைப்பு நாடகம் என தெரிவித்தார்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

தந்தை பெரியார் கல்லூரியில் நடைபெறவிருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திருச்சி: காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் கல்லூரியில் நாளை (செப்.24) நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, "தந்தை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் நடைபெற உள்ள முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அனைத்து முன்னாள் மாணவர்களும் வருகை தர வேண்டும்.

பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தற்போது பயிலும் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், இது உடனடியாக நடைமுறைக்கு வராது. தேர்தல் நெருங்குவதால் இதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

நாங்களும் இதற்கு ஆதரவு கொடுத்துள்ளோம். இதனை நிறைவேற்றுவதற்கு முன்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை. கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பதுபோல் தெரிகிறது. இது ஒரு கண் துடைப்பு நாடகம்.

தேர்தலுக்காக, தேர்தல் நெருங்குகின்ற காரணத்தால் கூறியுள்ளனர். இப்போது வேண்டாம், அடுத்த ஐந்தாண்டுகளில் இதை அமல்படுத்தலாம் எனக் கூறினோம். ஆனால், வழக்கம்போல் எங்களுடைய பேச்சை அவர்கள் கேட்கவில்லை. எங்களுடைய தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது எனக் கூறி இருந்தார். அதனால் நாங்களும் இந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதலை அளித்துள்ளோம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் நட்சத்திர விடுதிபோல் இருந்தது. பழைய கட்டடப் பொலிவு இல்லை. பழைய சிறப்புகள் இல்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இயற்றப்பட்டு இருக்கின்ற இந்தச் சட்டம், பெண்களுக்கு பொலிவு தருவதுபோல் இருக்கலாம். ஆனால், இதனால் தற்போது எந்தப் பயனும் இல்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க:"அநாவசியமாக சத்தம் போட்டால் சட்ட ரீதியாக சந்தித்தாக வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன்

ABOUT THE AUTHOR

...view details