தமிழ்நாடு

tamil nadu

திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இளைஞர் படுகொலை - கஞ்சா போதை காரணமா?

By

Published : Jun 16, 2022, 6:24 PM IST

திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் வாலிபர் படுகொலை - கஞ்சா போதை காரணமா?
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் வாலிபர் படுகொலை - கஞ்சா போதை காரணமா?

திருச்சி பள்ளக்காடு தோகைமலை மெயின் ரோடு பகுதியைச்சேர்ந்தவர், முத்துக்குமார் என்பவரின் மகன் ஆகாஷ் என்கிற செல்லா மாரி (19). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த அகிலா (21) என்பவரை ஆகாஷ் காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அகிலா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இந்நிலையில் சோமரசம்பேட்டை தாயனூர் பகுதியில் உள்ள வயல் வெளியில் ஆகாஷ் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோமரசம்பேட்டை காவல் துறையினர், ஆகாஷின் சடலத்தைக் கைப்பற்றினர்.

அப்போது, ஆகாஷின் உடலில் நெற்றி, கழுத்து மற்றும் உச்சந்தலை ஆகியப் பகுதிகளில் கத்திக்குத்துடன் கூடிய காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இளைஞர் உயிரிழந்துகிடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், “நேற்று இரவு ஆகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது தனது நண்பர்கள் நான்கு பேருடன் மது அருந்தியுள்ளார். மேலும், ஆகாஷுக்கு கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கஞ்சா போதைத் தகராறில் கொலை நடந்து இருக்கலாம்” எனத் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், உடனிருந்த நான்கு நண்பர்களும் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள நான்கு பேரையும் சோமரசம்பேட்டை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 19 வயதே ஆன இளைஞரின் படுகொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சாலையில் படுகாயத்துடன் கிடந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளி - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details