தமிழ்நாடு

tamil nadu

சிஏஜி அறிக்கை, அதானி விவகாரத்தை திசை திருப்ப பார்க்கிறார் மோடி - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 4:38 PM IST

Updated : Sep 3, 2023, 6:19 PM IST

Dayanidhi Maran Accused Modi: சி.ஏ.ஜி அறிக்கை மிகப்பெரிய ஊழல், அதை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். அதே போல அதானி பிரச்னைகளை திசை திருப்ப அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

modi-divert-cag-statement-and-adani-affair-dayanidhi-maran-mp-said-in-trichy-press-meet
சிஏஜி அறிக்கை, அதானி விவகாரத்தை திசை திருப்ப பார்க்கிறார் மோடி - தயாநிதி மாறன் எம்.பி குற்றச்சாட்டு!

தயாநிதி மாறன் பேட்டி

திருச்சி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியை தயாநிதி மாறன் எம்.பி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2வது இடத்தையும் பிடித்தது. அதே போல பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2வது இடத்தையும் பிடித்தது. வெற்றிபெற்ற அணிகளுக்கும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்த அணிகளுக்குக் கோப்பை, பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை தயாநிதி மாறன் எம்.பி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், “அவசர கதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவே இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டும் போது எதற்காக அது கூட்டப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சிறப்புக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள் அதுவும் ஏன் எனத் தெரியவில்லை.

இதையும் படிங்க:Special Session of Parliament: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சிறப்பு என்ன? எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெறவில்லை. அதே போல தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இல்லை. முதல் முறையாகப் பதவியிலிருந்து சென்ற குடியரசு தலைவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்துள்ளார்கள். அதுவும் ஏன் எனத் தெரியவில்லை.

கோமாளியை ரசிக்கலாம் ஆனால் கோமாளி கையில் ஆட்சியைக் கொடுத்தால் மன்றமே சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்பதற்கு தற்போது நடப்பதே உதாரணம். மோடியின் கூட்டணியில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தான் இருக்கிறார்கள். ஆனால், இந்தியா கூட்டணி மக்கள் கூட்டணி.

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய மூன்றிலும் தோல்வி அடைந்ததால் அடுத்து அடுத்து கஷ்டங்கள் வருகிறது என்பதற்காக ஒரே முறை தேர்தல் வைத்து அதில் தோல்வி அடைந்து விடலாம் என்பதற்காகத் தான் ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க தற்போது ஆதரிக்கிறது என உதயநிதி தெரிவித்துள்ளார், அதையே நானும் தெரிவிக்கிறேன்.

சி.ஏ.ஜி அறிக்கை மிகப்பெரிய ஊழல், அதை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். அதே போல அதானி பிரச்னைகளை திசை திருப்ப அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாட்டில் முக்கிய பிரச்சனை இருக்கும் போது மக்களை அதிலிருந்து திசை திருப்பி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி, அவர்களின் தவறை மறைப்பது தான் மோடியின் வேலை. 2024 ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற உடன் நீட்டுக்கு விதி விலக்கைக் கொண்டு வருவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி வினா போட்டி! முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

Last Updated :Sep 3, 2023, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details