தமிழ்நாடு

tamil nadu

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள சிக்கலுக்கு 2 நாட்களில் தீர்வு - அன்பில் மகேஷ் உறுதி

By

Published : Jan 31, 2023, 9:05 AM IST

அனைத்து அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள சிக்கல் இன்னும் 2 நாட்களில் தீர்க்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள சிக்கலுக்கு 2 நாட்களில் தீர்வு - அமைச்சர் உறுதி!
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள சிக்கலுக்கு 2 நாட்களில் தீர்வு - அமைச்சர் உறுதி!

திருச்சி: செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். மேலும் ‘பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற உறுதிமொழியை அமைச்சர் வாசித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து அப்பள்ளியில் கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “கொள்கை மாற்றத்தினால் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கான சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். 2 நாட்களில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்னை தீர்க்கப்படும்.

வரக்கூடிய பொதுத் தேர்வில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத இருக்கிறார்கள். மாணவர்களை விட மாணவிகள் வழக்கம்போல் அதிகமாக தேர்வெழுத உள்ளனர். பெண்கள் அதிகமாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே டிசம்பர் மாதம் குறைந்த அளவு விலையில்லா புத்தகப் பைகளை வழங்கினோம். அதில் தரத்தில் குறைவு ஏற்பட்டதால், அரசு அதனை நிறுத்தி உள்ளது. வரும் கல்வியாண்டில், ஜூன் மாதம் பள்ளி தொடங்கும்போதே அனைவருக்கும் விலையில்லா புத்தகப்பை வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் இது போன்ற காலதாமதம் ஏற்படாது. தமிழ்நாட்டில் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

தொடக்கப் பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு அடிக்கல் நாட்டு விழா நாளை (பிப்.1) காட்பாடியில் முதற்கட்டமாக 240 கோடியில் நடைபெற உள்ளது. 7,500 கோடி ரூபாய் பேராசிரியர் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடங்கள், கழிப்பறைகள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அனைத்தும் சரி செய்யப்படும்” என்றார்.

இதையும் படிங்க:தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் - ஆளுநர் ஆர்.என். ரவி

ABOUT THE AUTHOR

...view details