தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் 273 அடி உயர மலைக்கோட்டை உச்சியில் ஜொலிக்கும் மகா தீபம்! “ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய” எனப் பக்தர்கள் பக்தி பரவசம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 10:59 PM IST

karthigai Maha Deepam at Trichy hill fort: கார்த்திகை தீப திருநாளினை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

karthigai Maha Deepam at Trichy hill fort
திருச்சியில் 273 அடி உயர மலைக்கோட்டை உச்சியில் ஜொலிக்கும் மகா தீபம்

திருச்சியில் 273 அடி உயர மலைக்கோட்டை உச்சியில் ஜொலிக்கும் மகா தீபம்

திருச்சி: பிரசித்தி பெற்ற மலைக்கோட்டையின் மூன்று நிலைகளில் கோயில்கள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோயில், மலையின் நடுவே தாயுமானவர் கோயில், மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. தாயுமானவர் சுவாமி கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்க வடிவில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

இந்த நிலையில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர், தாயுமானவர் சன்னதியிலிருந்து மாலை 5.30 மணி அளவில் தீபம் ஏற்றப்பட்டு அங்கிருந்து தாயுமானவர், மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் தீபம் புறப்பாடாகி கொம்பு வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க 273 அடி உயரமும், 417 படிகளும் கொண்ட மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கொப்பரையில் ஆயிரம் லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி 300மீ அளவுள்ள பருத்தி துணியிலான மெகா திரியிட்டு வான வேடிக்கைகள் முழங்க மகா தீபம் வெகு சிறப்பாக ஏற்பட்டது.

மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் பக்தி பொங்க “ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய” எனக் கோஷமிட்டனர். இந்த தீபம் ஏற்றப்படுவதை மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டைப் பகுதி வீதிகளிலும் திரளான பக்தர்கள் நின்று பார்த்தனர்.

இந்த தீபத்தை மலைக் கோட்டையைச் சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க இயலும். கார்த்திகை தீப விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறநிலையத்துறையினர் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.

மகாதீபம் ஏற்றப்படும் போது சிவாச்சாரியார்கள், உபயதாரர்கள், ஓதுவார்கள், இந்து சமய அறநிலையத் துறையினர், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மகா தீபம் 3 நாட்கள் தொடர்ந்து இரவும், பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே வி.பி சிங்கிற்கு செய்யும் உண்மையான மரியாதை" - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details