தமிழ்நாடு

tamil nadu

எல்ஃபின் நிறுவனம் மீது மோசடி புகார்: சிவகாசி ஜெயலட்சுமி திருச்சியில் போராட்டம்

By

Published : Jun 25, 2021, 1:32 PM IST

சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சிவகாசி ஜெயலட்சுமி என்பவர் திருச்சியில் செயல்பட்டுவரும் எல்ஃபின் நிறுவனம் மீது மோசடி புகார் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

சிவகாசி ஜெயலட்சுமி திருச்சியில் போராட்டம்
சிவகாசி ஜெயலட்சுமி திருச்சியில் போராட்டம்

திருச்சி:மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் (ELFIN) என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனம் கவர்ச்சிகரமான வட்டி வழங்கும் திட்டங்களை அறிவித்து, ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் உறுதி அளித்தபடி இந்நிறுவனம் வட்டியையும், பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிறுவனம் சார்பில் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகளையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டாம் என்று நிறுவனத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் அலுவலகத்திற்கு அலையாய் அலைந்துவருகின்றனர்.

மோசடி குறித்து காவல் ஆணையரிடம் புகார்

எனினும் நிறுவனம் சார்பில் பணமும் கொடுக்கப்படவில்லை, உரிய பதிலும் அளிக்கப்படவில்லை என்று முதலீட்டாளர்கள் புலம்பிவருகின்றனர். இந்நிலையில், திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த மிதுன் சமேஷ் (28) என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இது குறித்து புகார் மனு அளித்தார்.

அதில், திருச்சி மன்னார்புரம் அருகே கல்லுகுழியிலுள்ள எல்ஃபின் நிறுவனத்தின் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் 72 லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்தேன்.

பத்து மாதம் கழித்து மூன்று மடங்காகத் திருப்பித் தருவதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா, ரமேஷ் ஆகியோர் உறுதியளித்தனர். அதன்பின்னர் என்னையும் அவர்கள் மூளைச்சலவை செய்து ஆள்களை இத்திட்டத்தில் சேர்த்துவிடும்படி கூறினார்கள்.

தகாத வார்த்தையால் திட்டிய நிறுவனம்

இதையடுத்து எனது உறவினர்கள் 10 பேரை இந்நிறுவனத்தில் பணம் செலுத்த செய்தேன். இந்த வகையில் மொத்தம் இரண்டு கோடியே 18 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினோம். திட்டத்தின் காலக்கெடு முடிவடைந்த நிலையில் பணம் கேட்டுச் சென்றபோது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். நிறுவனத்தினர் கொடுத்த காசோலையையும் பறித்துக்கொண்டு என்னை அடித்துவிரட்டினர்.

அதனால், இந்நிறுவனத்தில் செலுத்திய பணத்தைப் பெற்றுத்தருவதோடு, என்னைக் கொலைசெய்ய முயற்சித்த நிறுவன அதிபர்கள் ராஜா, இவரது சகோதரர் ரமேஷ், இளங்கோவன், பால்ராஜ், அறிவுமணி, சாகுல் ஹமீது, மதிவாணன், ராஜப்பா, பாதுஷா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

நிறுவனத்தில் காவல் துறையினர் குவிப்பு

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அலுவலர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சிவகாசி ஜெயலட்சுமி இன்று (ஜூன் 25) எல்ஃபின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

இவரும் இந்நிறுவனத்தில் மூன்று கோடியே 72 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் பணத்தை உடனடியாகத் திரும்ப வழங்க வேண்டும். அதுவரை அலுவலக நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார்.

காவல் துறையினருக்கு எதிராகப் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறிய சிவகாசி ஜெயலட்சுமி தற்போது எல்ஃபின் நிறுவனத்திற்கு எதிராகக் களம் இறங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக்கண்ட பாதிக்கப்பட்ட பலரும் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என எண்ணிய காவல் துறையினர், பாதுகாப்பிற்காக அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் பரிசு: ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்த ஆசாமி

ABOUT THE AUTHOR

...view details