தமிழ்நாடு

tamil nadu

“திருச்சி விமான நிலைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது” - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 9:27 AM IST

Minister TRB Rajaa: திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய கட்டுமான பணிகளைத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

industries minister trb rajaa inspected the trichy airport work
திருச்சி விமான நிலைய பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார்

திருச்சி விமான நிலைய பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார்

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்குத் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 900 பயணிகளைக் கையாளும் வகையில், சுமார் 1200 கோடி செலவில், 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய விமான முனையமானது கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையமானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணிகள் நிறைவடையாத காரணத்தினால் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது, விமான நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய கட்டுமான பணிகளைத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் நேற்று (டிச.03) ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், விமான நிலைய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியதாவது, ”தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் அனைவருக்கும், அனைத்தும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தர முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தை விரிவுபடுத்த, நிதிகளைப் பெற்று தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.விமான ஓடுதள விரிவாக்கத்துக்குப் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய இழப்பீடு வழங்கி நிலத்தைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் திறந்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

திருச்சி விமான நிலையம், டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு வெளி மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்து அதிக அளவில் தொழில் முனைவோர் வருகின்றனர். தஞ்சாவூரில் புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:வேலூர் மத்தியச் சிறையில் கைதி தற்கொலை.. சிறைக் காவலர்கள் மூவர் பணியிடை நீக்கம்..!

ABOUT THE AUTHOR

...view details