தமிழ்நாடு

tamil nadu

திமுக அமைச்சர்கள் இன்னும் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது: எச்.ராஜா காட்டம்!

By

Published : Aug 8, 2023, 8:09 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோபுரத்தின் சுண்ணாம்பு காரைகள் இடிந்து விழுந்ததையடுத்து, பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா அதனை பார்வையிட்டார்.

திருச்சி ரெங்கநாதர் கோயில் கோபுரத்தை பார்வையிட்ட போது எச்.ராஜா
திருச்சி ரெங்கநாதர் கோயில் கோபுரத்தை பார்வையிட்ட போது எச்.ராஜா

திருச்சி ரெங்கநாதர் கோயில் கோபுரத்தை பார்வையிட்ட போது எச்.ராஜா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், கிழக்கு வாசல் கோபுரத்தின் சுண்ணாம்பு காரைகள் இடிந்து விழுந்ததை பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் தேசியச் செயலாளருமான எச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா, "ஶ்ரீரங்கம் கிழக்கு கோயில் கோபுரம் இடிந்தது ஒரு பிரச்னையா? என்று கேட்டவன் மானங்கெட்டவர். அவர் இந்து மதத்துக்கான விரோதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்த கோபுரத்தில் காரையே விழாமல் பராமரித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி ஏதும் இங்கு நடக்கவில்லை.

இந்து மதத்தை தீர்க்கமாக பரப்பக்கூடியவரே அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும். அல்லேலூயா கோஷம் போட்டவர் அறநிலையத் துறையில் இருக்கக் கூடாது. கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் பெயரை குறிப்பிட்டு அவர் செலுத்திய தொகையை வெளிப்படையாக கூறுவதில்லை. வருமான வரித்துறை சட்டத்தில்‌ 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதனால் ஒரு நன்கொடையாளரையும் அணுகுவதில்லை. அமைச்சராக இருப்பவர் வீட்டின் காரை இடிந்து விழுந்தது போல்‌ இதுவும் இடிந்துள்ளது. இது ஒரு பிரச்னையா என்று கூறியிருக்கக் கூடாது'' என வெளிப்படையாக அவரின் குடும்பத்தை இகழ்ந்து கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாகரிகமானவராக இருந்தால், கோபுரம் இடிந்தது, ஹிந்துக்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருப்பார். இவர் நாகரிகமானவர் இல்லை. கட்டப்பஞ்சாயத்து செய்பவர். கோயில் நிலங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்திய போதிலும், கள்ளிமந்தயத்தில் 220 ஹெக்டரில் உள்ள பழனி கோயிலுக்கான ஒருங்கிணைந்த கோசாலை நிலம், சிப்காட்டாக மாற்றப்படும் என்கின்றனர். அமைச்சராக இருப்போரே மதப்பிரச்னையைக் கொண்டு வந்துள்ளார்.

'உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்', என்று சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ் எவ்வளவு உப்பு தின்றவர் என்பது எனக்குத் தெரியும். தமிழக அமைச்சரவையில், 17 அமைச்சர்கள் உள்ளனர். யார் யார் எவ்வளவு உப்பு தின்றனரோ, அவரவர் அவ்வளவுக்கும் தண்ணீர் குடிக்கத் தான் செய்ய வேண்டும். மற்ற துறைகள் போல், அமலாக்கத் துறை இல்லை. அமலாக்கத் துறையைப் பொறுத்தவரை, பத்திரிகைகளில் அநாவசியமாக பொய்களை பரப்பி விட வேண்டாம், என்பதற்காக சொல்கிறேன்.

போலீசார் ஒருவரை கைது செய்து வழக்கு நடத்தினால், அரசு தரப்பில் குற்றத்தை நிரூபிக்காமல் தோற்றுவிட்டால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஆனால், அமலாக்கத்துறையில், வழக்கு தோல்வியடைந்தால் அந்த வழக்கு போட்ட அதிகாரிக்கு அபராதமும், தண்டனையும் உண்டு. எனவே, ஒரு இடத்தில் அமலாக்கத் துறை இறங்கினாலே குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு உள்ளது என்று அர்த்தம். செந்தில் பாலாஜியை பொறுத்தவரை முகாந்திரம் தேவையில்லை.

அவரே நீதிமன்றத்தில் வாங்கினேன், திருப்பிக் கொடுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா என்று தெரியவில்லை. அதனால், அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 60 நாட்களில் வழக்கை நடத்த வேண்டும் என்று அனுமதி வாங்கியுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் விதித்த தடையையும், உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. செந்தில் பாலாஜி போலீஸ் ஜீப்பில் ஏறியதை, நேற்று இரவு தான் பார்க்க முடிந்தது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி. இடைநீக்கம்.. எஞ்சிய கூட்டங்களில் பங்கேற்க தடை!

ABOUT THE AUTHOR

...view details