தமிழ்நாடு

tamil nadu

பேருந்து வசதி கோரிய மக்களுக்காக முதலமைச்சர் போட்ட உத்தரவால் கூடுதல் பேருந்து இயக்கம்.. குஷியான கிராமம்!

By

Published : Jun 10, 2023, 10:58 PM IST

முதலமைச்சர் உத்தரவின் பேரில், லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு பேருந்து இயக்கப்பட்டதை அக்கிராம மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

Etv Bharat
Etv Bharat

ஆலங்குடி மகாஜனம் கிராமத்தினர் கொண்டாட்டம்

திருச்சி: லால்குடி அருகே உள்ள கூழையாறு மற்றும் புள்ளம்பாடி அருகே உள்ள நந்தியாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று (ஜூன் 9) திருச்சி வந்திருந்தார். அப்போது செல்லும் வழியில் ஆலங்குடி மகாஜனம் அருகே காரை நிறுத்திய முதலமைச்சர் அப்பகுதியில் நூறு நாள் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனு கேட்டறிந்தார்.

இதில் ஆலங்குடி மகாஜனம் கிராமத்திற்கு உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மாநகர் பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும், எனவே பேருந்து வசதி செய்து தருமாறு பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காலை 8 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு லால்குடியில் இருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும் காலை 8.35 மணி மற்றும் மாலை 6 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திற்கும் 4 நடைகள் பேருந்து இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: TN School Saturday:'இனி சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் நடக்கும்' - பள்ளி மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்..!

இந்த உத்தரவின் பேரில் இன்று (ஜூன் 10) காலை ஆலங்குடி மகாஜனத்தில் இருந்து செம்பரை காட்டூர் வழி தடத்தில் லால்குடிக்கு 88P என்ற நகர் பேருந்து இயக்கப்பட்டது. பேருந்து சேவையால் அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக முன்னதாக கிராம மக்கள் பேருந்திற்கு சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மாலை அணிவித்தும், பள்ளி சிறுவர்கள் பேருந்திற்கு வண்ண காகிதங்களை ஒட்டி அலங்கரித்தனர்.

இதைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம் வைத்து பொது மக்கள் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். அதன் பின்பு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேருந்தில் ஏறி பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மற்றும் பெண்கள் பேருந்தில் ஆரவாரத்துடன் ஆடிக் குதித்து, நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

இது குறித்து ஆலங்குடி மகாஜனம் பகுதியை சேர்ந்த பிரேமலதா கூறுகையில், ”நேற்றைய தினம் எங்கள் பகுதிக்கு ஆய்விற்காக வந்திருந்த முதலமைச்சர் எங்களை நேரில் சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது எங்கள் பகுதியில் பேருந்து வசதி இல்லை என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய பேருந்து வசதியை தொடங்கி வைத்த முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கிராம மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றி' என்று அக்கிராமத்தினர் சார்பாக தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: வீட்டு இணைப்பு மின் கட்டணம் உயர்த்தப்படாது - முதலமைச்சர் திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details