தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரோபோடிக் பயிற்சி வகுப்பு!

By

Published : Jul 12, 2023, 10:14 AM IST

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரோபோடிக் பயிற்சி வகுப்புகள் திருச்சி அரசு பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரோபோடிக் பயிற்சி வகுப்பு
திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரோபோடிக் பயிற்சி வகுப்பு

திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரோபோடிக் பயிற்சி வகுப்பு

திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்விதிறனை மேம்படுத்த வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளின் கல்வித் திறன் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் தரமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி மாநகர் பீமநகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று முதல் (ஜூலை 11) தொடங்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பேபி மாணவர்கள் மத்தியில் பேசும்போது, “கடந்த காலங்களை விட தற்போது நவீன காலமாக மாறி வருகிறது. ஸ்மார்ட் உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஆகையால், மாணவர்கள் டெக்னாலஜியை கற்றுக்கொள்ள வேண்டும். ரோபோடிக் இயந்திரத்தைப் பற்றி அனைவரும் நடிகர் ரஜினி நடித்துள்ள எந்திரன் படம் மூலம் அறிந்திருப்போம். அதில் ரோபோ என்ன ப்ரோக்ராம் செய்யபட்டதோ, அதை மட்டும்தான் செய்யும். குறிப்பாக, ரோபோ இயந்திரம் மூலம் நல்லது, கெட்டது என இரண்டும் இருப்பது போல தான் படத்தை எடுத்து இருப்பார்கள்.

ஆனால், மாணவர்கள் கல்வித்திறனை வளர்த்து கொண்டு சமுதாயத்திற்கு நல்லதை மட்டும் செய்யும் ரோபோ இயந்திரங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் நாட்டின் சிறந்த விஞ்ஞானியாக வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் ரோபா இயந்திரம் எப்படி செயல்படும் என்று செய்முறை செய்து காட்டபட்டது. அதில் ரோபோ இயந்திரம் மாணவர்களுக்கு யோகாசனம், நடனம் செய்து காண்பித்து அசத்தியது.

இதை மாணவர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறும்போது, முதல்கட்டமாக இந்த அரசுப் பள்ளியில் ரோபோடிக் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளோம். விரைவில் மற்ற பள்ளிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும் இது போன்ற பயிற்சி, மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க வழிவகை செய்யும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியங்கள் கசியவிட்டதாக புகார்.. மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details