தமிழ்நாடு

tamil nadu

குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு - அதிரடிப்படை குவிப்பு !

By

Published : Aug 29, 2020, 9:57 PM IST

தூத்துக்குடி : விவசாய நிலங்கள் வழியே ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை எதிர்த்து குலையன்கரிசல் மக்கள் அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு - அதிரடிப்படை குவிப்பு !
குழாய் பதிக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு - அதிரடிப்படை குவிப்பு !

தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் விவசாய நிலங்களின் வழியே மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்றுப்பாதையை தேர்வு செய்யக்கோரியும் பொட்டல்காடு கிராம மக்கள் அறவழி உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்திவருகின்றனர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாகம், மத்திய அரசிடம் பேசி மாற்றுப்பாதைக்கான ஆய்வு செய்கிறோம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) தொடர் உண்ணாவிரதம் இருப்பதாக பொட்டல்காடு, குலையன்கரிசல் கிராம மக்கள் அறிவித்ததை தொடர்ந்து அங்கு அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு படையும் வந்துள்ளது. பொட்டல்காடு ஐ.ஓ.சி நிறுவனத்தின் குழாய் பதிப்பு பிரச்னை குறித்த பேச்சுவார்த்தைக்கு போராட்டக்குழுவினரை மாவட்ட ஆட்சியர் இன்று மீண்டும் அழைத்துள்ளார்.

இதுபற்றி ஊர் பொதுமக்கள் பேசும்போது, "எரிவாயு குழாய் ஊரை ஒட்டி செல்கிறது அதை 500 மீட்டர் தூரத்தில் பதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அரசும் மாவட்ட நிர்வாகமும் கேட்பதாக தெரியவில்லை. அதனால் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தோம். அதற்கும் அனுமதிக்காமல் காவல்துறையினர் ஊர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் எங்கள் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது என்று முடிவு எடுக்கவுள்ளோம்" என தெரிவித்தனர்.

சென்னை எண்ணூர் - நாகப்பட்டினம் - தூத்துக்குடி பாதையில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி ஸ்பிக், ஸ்டெர்லைட், தாரங்கதாரா உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு சாலை வழியாக லாரிகள் மூலம் எரிவாயு கொண்டு சென்றால் அதிக செலவாகிறது என்பதால், நிலத்தடியில் குழாய்கள் பதித்து எரிவாயு கொண்டு வரப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details