தமிழ்நாடு

tamil nadu

'வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கப்பட்டுள்ளன' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

By

Published : Oct 21, 2020, 8:09 PM IST

சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளதாக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை எழிலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டில் சராசரியாக பெய்யும் தென்மேற்கு பருவ மழையை விட 20 விழுக்காடு கூடுதல் மழை பெய்துள்ளது. அதாவது, 424 புள்ளி 4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் சென்ற ஆண்டை விட தற்போது உயர்ந்துள்ளது. பவனி சாகர், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெரியாறு, பாபநாசம், பரம்பிக்குளம், ஆழியாறு, பெருஞ்சானி, சேலையாறு, கிருஷ்ணகிரி, திருமூர்த்தி அணை சென்ற ஆண்டை விட நீரின் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

அதேபோல, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செங்குன்றம், செம்பரம்பாக்கம், சோழவரம் நீர்த்தேக்கங்களில் கொள்ளளவும் அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.

தேடுதல் மீட்பு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேறி பாதுகாப்புக்காக தங்க வைக்கலாம் என்று 662 பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1000 காவலர்களை கொண்டு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி பெற்ற 5505 காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாது ஊர்க்காவல் படையினர் சார்ந்த 691 நபர்களும் பேரிடர் மீட்பு படையினர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் கீழ் 4199 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் அதேபோல, பாதுகாப்பு பணிகளுக்காக 9259 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

1094 கல்வி நிறுவனங்கள், 2561 தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றினார். 43 ஆயிரத்து 450 முதல்நிலை பணியாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்களில் 14,732 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல்நிலை மீட்பு பணியாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேரிடர் காலங்களில் பலத்த காற்றினால் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கும் 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பாம்பு பிடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள், நீரில் முழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் வீரர்கள் என தனித்தனியே கண்டறியப்பட்ட வீரர்களும் படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

3915 மரம் அறுக்கும் எந்திரங்கள், 2897 ஜே.சி.பி இயந்திரங்கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 அதிதிறன் கொண்ட பம்புகள், தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளன. முன்னெச்சரிக்கையாக வெள்ளம் பாதிப்புக்குள்ளாக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உள்பட 4713 தங்கும் மையங்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 450 நபர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா நோய்த்தொற்று காரணமாக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு கூடுதலாக தற்காலிக தங்கும் மையங்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் 4680 தங்கும் இடங்களை தயார் நிலையில் உள்ளன.

அவசர காலத்தில் காலங்களில் தகவல் தொடர்புக்காக 1070 மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம், 1077 மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம், TNSMART செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்து தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details