தமிழ்நாடு

tamil nadu

தனியார் பேருந்து பணியாளர்களுக்கு நிவாரண நிதி: திருச்சி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

By

Published : Sep 14, 2020, 7:17 PM IST

மதுரை : திருச்சி தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கரோனா கால நிவாரண நிதியை வழங்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பேருந்து பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி வழக்கு தொடுப்பு!
தனியார் பேருந்து பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி வழக்கு தொடுப்பு!

திருச்சி தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கரோனா கால நிவாரண நிதியை வழங்கக்கோரி அச்சங்கத்தின் தலைவர் செல்வம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "திருச்சி மாவட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. இதில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டுநர், நடத்துநர்களாகப் பணிபுரிந்துவருகின்றனர். தற்போது கரோனா பெருந்தொற்றுநோய் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை அடுத்து பேருந்துகளை இயக்க அரசு தடைவிதித்துள்ளது.

இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் குடும்பம் நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தோம்.

இதனை வழங்காததால், கடந்த ஜூலை 29ஆம் தேதி அன்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

அதில் நிவாரண நிதி வழங்க ஒப்புக்கொண்ட பேருந்து உரிமையாளர்களில் 50 விழுக்காட்டினர் இந்தப் பணத்தை இதுவரை வழங்கவில்லை. இது குறித்து அலுவலர்கள் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, நிவாரண நிதி வழங்காத தனியார் பேருந்து உரிமையாளர்கள் அனைவரும் உடனடியாக கரோனா கால நிவாரண நிதியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த மனுவை ஆராய்ந்த மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details