தமிழ்நாடு

tamil nadu

பழனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு!

By

Published : Sep 15, 2020, 6:49 PM IST

மதுரை : பழனி நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்ற கோரிய வழக்கு!
பழனியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்ற கோரிய வழக்கு!

பழனியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் ரயில்வே பீட்டர் சாலை அமைந்துள்ளது. சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுக்கள், பச்சை மரங்கள் சிறிய கோயில்கள் ஆகிய அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், அங்கு இருக்கக்கூடிய பெரியார் சிலை மட்டும் அகற்றப்படாமல் உள்ளது. பெரியார் சிலையை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கப் பணியை தொடர அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், பழனி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வியெழுப்பியது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "சாலை விரிவாக்கத்தின் போது இருக்கக்கூடிய பெரியார் சிலை முறையான அனுமதி பெற்றே வைக்கப்பட்டுள்ளது. சாலைக்கு இடையூறு எதுவும் இல்லை. அதேபோல, பழனி நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து திண்டுக்கல் ஆட்சியர் தலைமையில் நில அளவை, வருவாய் துறை, நகராட்சி துறை கொண்ட அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து, அக்குழு மூலமாக நகராட்சி முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை கண்டறிய வேண்டும். ஆக்கிரமிப்பிற்குள்ளாகி இருக்கும் நிலங்களை மீண்டும் அளவீடு செய்து முறையாக கையகப்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனார்.

ABOUT THE AUTHOR

...view details