தமிழ்நாடு

tamil nadu

Tirupur:போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலியான சிசிடிவி காட்சி... போலீசார் மிரட்டுவதாக உறவினர்கள் புகார்

By

Published : Jul 6, 2023, 8:10 PM IST

திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில், அவரது உடலை வாங்க வேண்டும் என போலீசார் மிரட்டுவதாக உறவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

tirupur-police-vehicle-accident-cctv-relative-complained-of-police-threats
திருப்பூர்:போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலியான சிசிடிவி காட்சி...போலீசார் மிரட்டுவதாக புகார்

Tirupur:போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலியான சிசிடிவி காட்சி... போலீசார் மிரட்டுவதாக உறவினர்கள் புகார்

திருப்பூர்:திருப்பூரைசேர்ந்த ஜெயராஜ் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 19 வயதில் சஞ்சய் என்ற மகனும்; 8 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். ஜெயராஜ் துபாயில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சஞ்சய் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரக்கூடிய நிலையில் திவ்யதர்ஷினி விஜயாபுரம் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளிக்குச் சென்ற திவ்யதர்ஷினியை வழக்கம்போல ராஜேஸ்வரி நேற்று(ஜூலை 5) மாலை அழைத்து வந்து கொண்டிருந்தபோது நல்லூர் காவல் நிலையம் அடுத்த புதூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் ராஜேஸ்வரி வந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வேகமாக வந்த நல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ராஜேஸ்வரி காலில் படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் காவல் வாகனத்தை சிறைப்படுத்தினர்.

அப்போது காவல் வாகனத்தில் இருந்த ஊர் காவல் படையைச் சேர்ந்த காவலர் வீர சின்னன் மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் அறிந்து வந்த நல்லூர் காவல்துறையினர் வீர சின்னனை மீட்டு அருகில் உள்ள ஏடிஎம் அலுவலகத்தில் அருகில் பாதுகாப்புடன் அமர வைத்து, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்கு காரணமான காவலரை காவல்துறையினர் காப்பாற்ற முயற்சிப்பதாகக் கூறி, பொதுமக்கள் திருப்பூர் காங்கேயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பொதுமக்கள் தரப்பில் காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாகவும்; அவர் மீது மது போதையில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் முதல் தகவல் அறிக்கையை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தனர். பொதுமக்களிடம் பேசிய காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஜெயராஜ் ராஜேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகன் சஞ்சீவ் கூறும் போது, தான் கல்லூரியில் இருந்து வரும்போது சம்பவம் குறித்து தனக்கு தெரிவித்ததாகவும்; ஆனால் தங்கையின் உடலை இதுவரை தனக்கு காட்டவில்லை எனவும் தாய்க்கும் படுகாயம் ஏற்பட்டுள்ள நிலையில் தந்தை துபாயில் உள்ள நிலையில் தான் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருப்பதாகவும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேட்டி அளித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் விளக்கம்கேட்டபோது, ''எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தனர்

மேலும் இச்சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் வீட்டில் அருகில் வசிக்கும் பாத்திமா கூறும்போது, ''விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதில் திவ்யதர்ஷினி மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திவ்யதர்சனியின் பள்ளிப்பை கீழே விழுந்த போது நிலை தடுமாறிய ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த காவல்துறையினரின் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சிறுமி திவ்யதர்சனியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்து உடலை பெற்றுக்கொள்ள காவல்துறையினர் தங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் குழந்தையின் தாய் ராஜேஸ்வரி படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையிலும் தந்தை குவைத்திலும் இருக்கக்கூடிய நிலையில் தாங்கள் எப்படி உடலை பெற்றுக் கொள்ள முடியும். அதனால் தந்தை வரும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவிப்பதால், காவல்துறையினர் தங்களை உடலை பெற்றுக்கொள்ள தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதுவரை காவலர் வீர சின்னன் மது போதையில் இருந்ததாக தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்'' எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை உதவி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ''முதற்கட்டமாக வீரசின்னன் மீது 304 A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக வாகனம் இயக்கி விபத்து மற்றும் மரணம் விளைவித்தல் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வீரசின்னன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தையின்‌ தந்தை ஜெயராஜ் விசா காலம் முடிவடைந்த நிலையில் குவைத்தில் பணியாற்றி வருகிறார். அவர் திரும்பி வர கால தாமதம் ஆகும் என்ற நிலையில் இந்தியா திரும்பி வர தூதரகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இன்று இரவு அவர் குவைத்தில் இருந்து இந்தியா புறப்படுவார். தாய் ராஜேஷ்வரிக்கு கால் மற்றும் கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5 லட்சம் ரூபாய் மருத்துவ செலவு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :நெல்லையில் பைக் மீது லாரி மோதிய கோர விபத்து - குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details