தமிழ்நாடு

tamil nadu

டிராக்டரில் உழவு பணிக்குச் சென்ற நபர் மீது ஏறி கிணற்றில் விழுந்த டிராக்டர்..! திருப்பத்தூரில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 4:29 PM IST

Tractor Accident: விவசாய நிலத்தில் ஏர் உழுவதற்காக டிராக்டரில் சென்ற நபர், டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tractor driver dies after being hit by tractor in tirupathur
திருப்பத்தூரில் டிராக்டர் ஓட்டுநர் டிராக்டர் ஏறி உயிரிழப்பு

திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35). டிராக்டர் ஓட்டுநரான இவர் இன்று (டிச.28) காலை, அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு டிராக்டர் மூலம் ஏரிக்கரை வழியாகச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக விவசாயி வெங்டேசனின் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து, ஏரிக்கரையில் இருந்து பள்ளமான பகுதியை நோக்கி தாறுமாறாக ஓடியுள்ளது.

இதில் நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்த நிலையில், அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, டிராக்டர் மேலும் கட்டுப்பாட்டை இழந்து, அருகே இருந்த விஜயகுமார் என்பவரின் நிலத்தில் போடப்பட்டிருந்த கொட்டகையை இடித்துக் கொண்டு அங்கிருந்த 100 அடி கிணற்றில் விழுந்து மூழ்கியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விவசாய நிலத்தில் ஏர் உழுவதற்காக டிராக்டரில் சென்ற நபர் டிராக்டர் ஏறி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:படிப்பதற்கு டார்கெட் வைக்கசொன்னால் குடிப்பதற்கு டார்கெட் வைக்கிறார்கள் - நடிகை கஸ்தூரி

ABOUT THE AUTHOR

...view details