தமிழ்நாடு

tamil nadu

காதல் தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கிய ஊர் நாட்டாமைகள்: எச்சரித்த காவல் துறையினர்

By

Published : Nov 19, 2020, 1:21 PM IST

திருப்பத்தூர்: காதல் தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த ஊர் நாட்டாமைகளை (அதிமுக பிரமுகர்கள்) காவல் துறையினர் எச்சரித்ததோடு, இரண்டு குடும்பத்தினருக்கும் ஊர் சார்பில் எவ்வித நிபந்தனைகளுக்கு விதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இந்தக் காதல் திருமணத்தின் காரணமாக தம்பதியின் பெற்றோருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதமும் ஊர் நாட்டாமைகள் விதித்துள்ளனர்.

காதல் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கிய ஊர் நாட்டாமைகள்
காதல் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கிய ஊர் நாட்டாமைகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (எ) கனகு(26), அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் ஜெயபிரியாவை (23) காதலித்து திருமணம் செய்ததற்காக புல்லூர் பஞ்சாயத்தினர் இரு குடும்பத்தினருக்கும் அபராதம் விதித்து ஊரை விட்டும் ஒதுக்கி வைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, கனகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமாரிடம் கடந்த 10ஆம் தேதி புகார் மனு கொடுத்தார். இன்று (நவ.19) வாணியம்பாடி சரக காவல் உட்கோட்டம் சார்பில் நடைபெற்ற புகார் மனுக்கள் மீதான முகாமில், கனகுவின் மனு மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த மனு விசாரணை நடைபெற்ற தனியார் மண்டபத்திற்கு, காதல் ஜோடிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும், நாட்டாமைகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களும் வருகை தந்தனர். இதனையறிந்த போலீசார் புகார் அளித்த சம்மந்தப்பட்டோர் தவிர மற்ற அனைவரையும் வெளியேற்றினர்.

காதல் திருமணம் செய்துகொண்ட கனகராஜ், ஜெயபிரியா தம்பதிக்கும், இரு குடும்பத்தினருக்கும் ஊர் சார்பில் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கக்கூடாது என காவல் துறையினர் ஊர் நாட்டாமைகளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

ஊர் நாட்டாமைகளை எச்சரித்த காவல் துறையினர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனகு- ஜெயப்பிரியா தம்பதியினர் தங்கள் விருப்பப்படி காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, இரு குடும்பத்தினரும் பஞ்சாயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், பெண் வீட்டாருக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இவ்வளவு பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த முடியாததாலும், ஊரில் இருக்கும் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாததாலும் இத்தம்பதியினர் பிழைப்புக்காகச் சென்னைக்கு சென்றனர். கனகு, கடந்த ஒன்றை ஆண்டுகளாக சென்னையில் ஓட்டுநராக வேலை செய்த நிலையில் கரோனா பொதுமுடக்கத்தால் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.

தகவலறிந்த அதிமுக பிரமுகர்களான ஊர் நாட்டாமைகள் எல்லப்பன், நாகேஷ் ஆகியோர் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியனரை அபராதத் தொகையை கட்ட வலியுறுத்தினர். பெண்ணின் தந்தை குமரேசன் தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். அபராத தொகையைக் கட்டாததால் வேலை செய்யும் இடத்தில் வேலை வழங்க கூடாது என்று ஊர் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

காதல் தம்பதி

வற்புறுத்தலின் பேரில் பெண்ணின் தந்தை குமரேசன் ஊர் நாட்டாமையிடம் 10 ஆயிரம் ரூபாயை அபராத தொகையாக செலுத்தினார். கனகராஜ் அபராதம் தொகை கட்ட முடியாததால் கடந்த 10ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமாரிடம் புகார் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடர்ந்து பலியாகும் உயிர்கள்: ஊர் நாட்டாமையின் கட்டப் பஞ்சாயத்தை முடித்து வைக்குமா மாவட்ட நிர்வாகம்?

ABOUT THE AUTHOR

...view details