தமிழ்நாடு

tamil nadu

நகராட்சித் தேர்தல் விதிமுறைகளால் எருது விடும் போட்டி ரத்து

By

Published : Jan 27, 2022, 10:58 PM IST

ஆம்பூர் அருகே நகராட்சித் தேர்தலை முன்னிட்டு,தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளால் எருது விடும் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நகராட்சித் தேர்தல் விதிமுறைகளால் எருது விடும் போட்டி ரத்து
நகராட்சித் தேர்தல் விதிமுறைகளால் எருது விடும் போட்டி ரத்து

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் ஆண்டுதோறும் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் 179ஆம் ஆண்டு எருது விடும் திருவிழாவிற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று (ஜன.27) எருது விடும் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழாவிற்கான ஆயுத்த பணிகளை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு ரூ.1 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு கிராமத்திற்கு வந்த அலுவலர்கள் நகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆம்பூர் நகராட்சியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு விழாவும் நடைபெற அனுமதியில்லை எனவும் தேர்தல் விதிமுறைகள் அமலாவதாகக் கூறி எருது விடும் திருவிழாவிற்கான அனுமதியை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

கிராம மக்கள் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவு முதல் விடிய விடிய சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆம்பூர் டி.எஸ்.பி சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கிராமமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் எருது விடும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து வீராங்குப்பம் பகுதியை நோக்கி வந்த இளைஞர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். கிராமம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு சில மணி நேரங்களில் விழா நடைபெற இருந்த நிலையில் நள்ளிரவில் அலுவலர்கள் விழாவிற்கான அனுமதியை ரத்து செய்ததால் எருது விடும் விழாவில் பங்கேற்க வந்த காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாணியம்பாடி அருகே இளைஞர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details