தமிழ்நாடு

tamil nadu

'மறுவாக்கு எண்ணிக்கை கோரி வாக்குவாதம்' - கண்ணீருடன் வெளியேறிய அதிமுக நிர்வாகி!

By

Published : Oct 13, 2021, 9:30 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற அதிமுக நிர்வாகி, மறுவாக்கு எண்ணிக்கையை நடத்தக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்து கண்ணீர் மல்க வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கண்ணீருடன் அதிமுக நிர்வாகி வெளியேற்றம்!
கண்ணீருடன் அதிமுக நிர்வாகி வெளியேற்றம்!

திருப்பத்தூர்: புதிதாகப் பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று(அக்.12) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் மாதனூர் ஒன்றியத்திக்குட்பட்ட 5,600 வாக்குகள் உள்ள 19ஆம் எண் ஊராட்சி ஒன்றிய வார்டின் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி ராஜாநந்தன் 2 ஆயிரத்து 141 வாக்குகளும், திமுக நிர்வாகி முத்து 2 ஆயிரத்து 142 வாக்குகளும் பெற்றனர்.

கண்ணீர் விட்ட அதிமுக பெண் நிர்வாகி தொடர்பான காணொலி

6 மணி நேர வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி

வெறும் ஒரு வாக்கு மட்டுமே வித்தியாசம் இருந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அதிமுகவினர் தேர்தல் அலுவலர் துரையிடம் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் நீண்ட நேரமாக வாக்கு எண்ணிக்கை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஒரு வழியாக நீண்டநேரத்திற்குப் பிறகு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில் அதிமுக நிர்வாகிக்கு 3, திமுக நிர்வாகிக்கு 1 என்ற வீதத்தில் தபால் வாக்குகள் கிடைத்திருந்தன. இப்போது மொத்த வாக்குகளின் எண்ணிக்கையின்படி அதிமுகவினர் முன்னிலையில் இருந்தும், திமுக நிர்வாகி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி சுமார் 6 மணி நேர வாக்குவாதத்திற்குப் பிறகு அங்கிருந்து வெளியேறினார்.

கண்ணீர் மல்க வெளியேறிய அதிமுக நிர்வாகி

இதே போன்று, மாதனூர் 2ஆவது எண் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக நிர்வாகி கவிதா சக்திவேல், காங்கிரஸ் நிர்வாகி சசிகலா உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு எண்ணிகை நேற்று (அக்.12) எண்ணப்பட்ட நிலையில், இன்று (அக்.13) காலை 4 மணியளவில் தேர்தல் அலுவலர்கள் அதிமுக 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகக் கூறியுள்ளனர்.

பின்னர் மீண்டும் 4 மணி நேரத்திற்குப் பிறகு, அங்கு வந்த தேர்தல் அலுவலர்கள் 16 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் நிர்வாகி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர்களது கோரிக்கைக்கு தேர்தல் அலுவலர்கள் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்போது திடீரென ஓர் அறையில் வாக்குஎண்ணிக்கை தாளில் குளறுபடி நடப்பதாகக் கூறிய அதிமுகவினர், தேர்தல் அலுவலரை சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நியாயமான முறையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்படி, அதிமுகவினர் அலுவலர்களை கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

அலுவலரை கையெடுத்து கும்பிடும் அதிமுக நிர்வாகி ஆதரவாளர்

முடிவில் மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக காங்கிரஸ் நிர்வாகி வெற்றி பெற்றதாக அலுவலர்கள் அறிவித்தனர். இதனால் மனமுடைந்த அதிமுக நிர்வாகி கவிதா சக்திவேல் கண்ணீர் மல்க அங்கிருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:'இந்தப் படை ஒன்றே வெல்லும் படை' என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்ட உ.பி.க்களே!

ABOUT THE AUTHOR

...view details