தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் - விசிக தலைவர் திருமாவளவன் தாக்கு

By

Published : Jan 8, 2023, 10:29 AM IST

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் பணிகளை மேற்கொள்ளலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன்

தூத்துக்குடி:திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "தமிழக ஆளுநர் ரவி குதர்க்கமான கருத்துகளை பேசி வருவதாகவும், தமிழ்நாடு என்றாலும், தமிழகம் என்றாலும் ஒன்று தான், தமிழ்நாடு தவறான சொல் என்ற தோற்றத்தை ஆளுநர் உருவாக்குகிறார் என்று தெரிவித்தார்.

ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் என்றாலும் நாடு என்று தான் பொருள். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு சென்று பிரதேஷ், ராஷ்டிரா என்று இருக்கிறது என்று ஆளுநர் சொல்வார என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு, வட மொழியில் ராஷ்டிரம், பிரதேஷ் என ஒவ்வோரு மாநிலத்திலும் அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்ப வேறுபடுவதாக கூறினார். பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை வேண்டுமென்றே பழிப்பதற்கான, கருத்து தோற்றத்தை ஆளுநர் உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார்.

ஆளுநர் அரசியலமைப்பின் சட்டப் பிரதிநிதி என்றும் ஆனால் அவர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் அது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிப்பது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். வேண்டுமென்றால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகள் அவர் மேற்கொள்ளலாம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு, தமிழகம் ஒரே பொருள் தான். காமராஜர், அண்ணா காலத்திலேயே சட்ட பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றபட்டு மத்திய அரசின் ஒப்புகையோடு பயன்பாட்டில் இருந்து வருவதாக கூறிய திருமாவளவன் ஆளுநரின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். திமுக அரசின் கொள்கைக்கும், திராவிட அரசியல் கோட்பாட்டிருக்கும் ஆளுநர் எதிராக செயல்படுவதாகவும், திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை முன்னிறுத்தி சட்டப் பேரவையில் உரை நிகழ்த்த அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் இல்லை என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்களை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென தெரிவித்தார். நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்களை கைது செய்யக் கோரி வரும் 11ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற சுபஸ்ரீ இறந்தது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அவர், யோகா மையத்தில் இருந்து பெண் தப்பி ஓட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து அறியப்பட வேண்டும் என்றும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நல்லிணக்க கூட்டணியை முதலமைச்சர் வழி நடத்தி செல்வதாகவும், பொது மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி நடப்பதாகவும் கூறிய திருமாவளவன், தலித் வன்கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுப்பது, வன்கொடுமையை தடுக்க வழிகாட்டுவது என சமூக நீதி தொடர்பான திமுகவின் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

இதையும் படிங்க:அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்

ABOUT THE AUTHOR

...view details