தமிழ்நாடு

tamil nadu

தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு.. செய்தியாளர்களைப் புறக்கணித்ததால் சர்ச்சை..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 4:05 PM IST

Union Finance Minister Nirmala sitharaman: தென் மாவட்ட மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறக்கணித்து விட்டுச் சென்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Union Finance Minister Nirmala sitharaman
தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு

தூத்துக்குடி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக, கடந்த வாரம் கோரத் தாண்டவம் ஆடிய கனமழையால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் கொட்டித் தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் இதுவரை இல்லாத வகையில், பெரும் வெள்ளம் ஏற்பட்டு ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கியது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆத்தூர், ஸ்ரீ வைகுண்டம், குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆறு முடிவடையும் பகுதியான புன்னக்காயல், சேர்ந்தமங்கலம் போன்ற பகுதிகளில் சுமார் ஐந்து நாட்களாகத் தண்ணீர் சூழ்ந்து இருந்ததால், அங்குத் தொலைத்தொடர்பு இல்லாத நிலை நீடித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் நேற்று (டிச.25) வரை 31 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெரும் துயரத்திற்கு இடையே நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (டிச.26) வந்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி, தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மற்றும் பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக வெள்ளத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.

மேற்கண்ட, இரு மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகள் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். மீட்பு மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்துக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மத்திய அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

ஆய்வுக்கூடத்திற்குப் பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திப்பார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் செய்தியாளர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் மத்திய நிதி அமைச்சர் வருகைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் நிற்கும் பக்கத்தைத் திரும்பிப் பார்க்காமல் அவசர அவசரமாக அங்கிருந்து காரில் ஏறிக் கிளம்பிச் சென்றார்.

தொடர்ந்து அவர் மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார். இதற்கிடையில், தூத்துக்குடி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேட்டிக்காகத் தொடர்பு கொண்ட போது அவர்களும் பேட்டியளிக்க மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே, தென் மாவட்ட மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து பல்வேறு அரசியல் மோதல்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு போதுமான பேரிடர் நிதியை வழங்கவில்லை எனத் தமிழக அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்கள் அப்பன் வீட்டுப் பணமா என்று கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளப் பாதிப்பைப் பார்வையிட நேரில் வந்ததால் ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து, முக்கிய தகவல்களை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செய்தியாளர்களைப் புறக்கணித்து விட்டுச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:வெள்ள நிவாரண நிதி டோக்கன்: திருநெல்வேலியில் (டிச.26) இன்று தொடக்கம் - அலைமோதும் மக்கள்..!

ABOUT THE AUTHOR

...view details