தமிழ்நாடு

tamil nadu

மாலத்தீவில் சிக்கியுள்ள தூத்துக்குடி மீனவர்கள்.. தருவைகுளம் மீனவர்களின் போராட்டம் வாபஸ்.. பின்னணி என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 8:35 AM IST

Thoothukudi fisherman in Maldives: மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் விசைப்படகை உடனடியாக அரசு மீட்டுத் தர வேண்டி இன்று (நவ.27) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளுடனான பேச்சுவார்த்க்கு பிறகு, போராட்டத்தை அப்பகுதி மக்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி மீனவர்கள் தரப்பு விளக்கம்

தூத்துக்குடி: தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த அந்தோணி செல்வசேகரன்(23), ஆதிநாராயணன்(20), மகேஷ்குமார்(24), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயகுமார்(31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர் (22), அதிசய பரலோக திரவியம்(25), மதுரையைச் சேர்ந்த மாதேஷ் குமார் (15), சிலுவை பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு சூசை மிக்கேல் (48), விக்னேஷ், (31) மற்றும் மணி, சக்தி உட்பட 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

அப்போது, கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று, திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. அதையடுத்து 12 தமிழக மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.

அதனையடுத்து, இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலத்தீவு அரசு மீனவர்களை விடுவிக்க முன்வந்தது. ஆனால் படகை விடுவிக்க மறுப்பு தெரிவித்து, மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 லட்சம் ரூபியா (மாலத்தீவு நாட்டின் பணமதிப்பு), வலை உபயோகித்து மீன் பிடித்ததாக 20 லட்சம் ரூபியா, உரிமம் இல்லாமல் அந்நாட்டு கடல் பகுதியில் இருந்ததற்காக 20 லட்சம் ரூபியா என அபராதம் விதித்தது.

இந்திய பண மதிப்பின் படி, 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டிய பிறகு தான் படகை விடுவிக்க முடியும் என்று மாலத்தீவு அரசு தெரிவித்தது. பின்னர், பல கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, கடந்த நவம்பர் 11ஆம் தேதி 8 மீனவர்களை மட்டும் மாலத்தீவில் இருந்து நாடு திரும்பினர்.

மற்ற 4 மீனவர்கள் விசைப் படகை மீட்பதற்காக மாலத்தீவில் இருக்கும் நிலையில், தருவவைகுளம் மக்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், படகை மீட்க எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, படகை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி இன்று (நவ.27) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தருவைகுளம் மக்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், பங்குத்தந்தை வின்சென்ட் இல்லத்தில் வைத்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.

அதில் மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், ஒட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், வருவாய்த்துறை அதிகாரி வாசுகி, கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, கடலோர அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் உமையேரும் பாகம், தருவைகுளம் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், 20 நாட்களில் படகை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அதிகாரிகள் உறுதியளித்தாக அம்மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து பங்குத்தந்தை வின்சென்ட் கூறுகையில், "அதிகாரிகள் அளித்த உறுதியளித்ததன் அடிப்படையில், நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டதை தற்காலிகமாக தள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை டிசம்பர் வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே!

ABOUT THE AUTHOR

...view details