தமிழ்நாடு

tamil nadu

மகாகவி பாரதியாரின் 142வது பிறந்தநாள்... பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தூத்துக்குடி ஆட்சியர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 9:47 PM IST

Bharatiyar's 142th Birthday Celebration: மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்குத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தூத்துக்குடி ஆட்சியர்
பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தூத்துக்குடி ஆட்சியர்

பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தூத்துக்குடி ஆட்சியர்

தூத்துக்குடி:மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த நாளை இன்று (டிச.11) கொண்டாடப்படுவதையொட்டி, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி மார்க்கண்டேயன் முன்னிலையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பேசியதாவது, “மகாகவி பாரதியார் எட்டயபுரத்தில் 1882 ஆம் ஆண்டு, டிசம்பர் 11 ஆம் நாள் சின்னச்சாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்த பாரதியார், தமிழ்க்கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு நவீன தமிழ்க்கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

பாரதியாரின் 11 வயதில் அவரது கவிதை பாடும் ஆற்றலைப் பாராட்டி எட்டயபுரம் மன்னர் ‘பாரதி’ என்ற பட்டத்தினை வழங்கினார். பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப்போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கிய பாரதியார் தனது கவிதைகள் மூலம் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டினார்.

ஏராளமான கவிதைகள், உரைநடை நூல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதி உள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதியார் சக்கரவர்த்தினி என்ற இதழைத் தொடங்கி, அதில் வந்தேமாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியா என்னும் வார இதழையும், பால பாரதம் என்னும் ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தி இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டார்.

தன்னுடைய பத்திரிக்கைகளில் சுதந்திர முழக்கத்தைத் தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்களைக் கொண்டு ஒலி ஒளி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினை அறிந்துகொள்ளலாம்.

மேலும் பாரதியார் மணிமண்டபத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நூலகம் அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் இந்நூலகத்தை நன்றாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தது நம் அனைவருக்கும் பெருமையாகும்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா நவீன் பாண்டியன், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத்தலைவர் கதிர்வேல், எட்டயபுரம் வருவாய் ஆய்வாளர் கோமதி, எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி உறுப்பினர் ஜெயலட்சுமி மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் பயின்ற பள்ளியான மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பாரதியார் பயின்ற வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயருடன் அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. பாரதியார் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளதால், அவர் பயின்ற வகுப்பறையில் மாணவிகள் மட்டும் பயின்று வருகின்றனர்.

மேலும் நாற்றங்கால் வகுப்பறையில் பெண் விடுதலை குறித்த அவரது கவிதைகள் மற்றும் அவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கும். பாரதியாரின் 142வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாற்றங்கால் வகுப்பறையில் இன்று மாணவிகள் ஒன்றிணைந்து இறை வணக்க பாடலோடு அவரின் பாடல்களைப் பாடி அவருக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அந்த வகுப்பறையில் உள்ள மார்பளவு சிலைக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த அரிய வகை புகுந்த மிளா மான்..! மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர்..!

ABOUT THE AUTHOR

...view details