தமிழ்நாடு

tamil nadu

எம்எல்ஏவின் உதவியாளர் கடத்தல்: ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் - ஒருவர் கைது

By

Published : Apr 19, 2023, 5:24 PM IST

ஸ்ரீவைகுண்டம் அருகே காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜின் உதவியாளரை கடத்தி, கத்திமுனையில் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

MLA aide
எம்எல்ஏ உதவியாளர்

ஸ்ரீவைகுண்டம்:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியைச் சேர்ந்தவர், மரியராஜ் ( 42). ஆழ்வார் திருநகரியில் வசித்து வரும் இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவு செய்தித் தொடர்பாளராகவும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜின் உதவியாளராகவும் இருந்து வருகிறார். இவரை கடத்திய கும்பல், ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கடந்த திங்கள்கிழமை ஏரலுக்கு சென்ற மரியராஜ் இரவு 9 மணியளவில், ஆழ்வார் திருநகரிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். சிவராம மங்கலம் பகுதியில் வந்தபோது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றது தெரியவந்துள்ளது. அப்போது கத்தியுடன் வந்த மூன்று பேர் மரியராஜை கடுமையாகத் தாக்கினர். அவரிடம் இருந்த செல்போன் மற்றும் மணிபர்ஸை பறித்தனர். இதையடுத்து மரியராஜை அருகில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் மரியராஜிடம், 'நீ உயிருடன் திரும்ப வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும்' என மிரட்டியுள்ளனர். மேலும் செல்போனை கொடுத்து, உறவினர்களிடம் பணத்தை எடுத்து வருமாறும் கூறியுள்ளனர். உடனடியாக தனது தந்தைக்கும், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருக்கும் மரியராஜ் போன் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியைடந்த காங்கிரஸ் நிர்வாகிகளும், மரியராஜின் குடும்பத்தினரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், மரியராஜின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர். அது சிவராம மங்கலம் பகுதியைக் காட்டியதால் அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. வாழைத்தோட்டம் அருகே போலீசார் டார்ச் லைட் அடித்து தேடிப்பார்த்த போது, கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய மரியராஜ், போலீசாரிடம் தஞ்சம் அடைந்தார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தோட்டத்துக்குள் பதுங்கியிருந்த சிவராம மங்கலத்தைச் சேர்ந்த வீரசங்கிலி என்பவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே தாக்குதலில் காயம் அடைந்த மரியராஜ், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் 7 போலி மருத்துவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details