தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 7:56 AM IST

Christmas: உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வரவும், அவர்கள் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி பெறவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி: கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் இளைஞர்கள் கிறிஸ்துமஸ் தினத்தின் முதல் நாளிலிருந்தே உற்சாகமாக பல்வேறு இசைகளை எழுப்பியபடி, ஜெபக்கீர்த்தனைகளைப் பாடி நடனமாடியபடி பவனி வருவர். இந்த கேரல் சர்வீஸை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் திரண்டு நின்று பார்த்து மகிழ்ச்சி அடைவர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகர் முழுவதும் கடந்த 17, 18ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்ததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் வழக்கமாக கொண்டாடப்படும் கேரல் சர்வீஸ் ரத்து செய்யப்பட்டது. அதற்காக செலவிடப்படும் தொகையை இளைஞர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நேற்று நள்ளிரவு இயேசு பாலன் பிறப்பு வைபவம் தத்ரூபமாக குடில் காட்சிப்படுத்தபட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு திருப்பலியில் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பங்குத்தந்தை குமாரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கு பெற்று, தூத்துக்குடி மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்ப பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்கள் வாழ்வில் அமைதி மற்றும் மகிழ்ச்சி பெறவும், அவர்கள் இழந்த உடைமைகள் பல மடங்கு பெருகவும் பிரார்த்தனை செய்தனர்.

இதையும் படிங்க:இது சாதா குடில் இல்ல... வேற வேற... விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் குடில்!... அசத்தும் ஓவிய ஆசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details