தமிழ்நாடு

tamil nadu

டிச.26-இல் தூத்துக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 8:44 AM IST

Nirmala Sitharaman: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அதிகாரிகள் உடன் ஆய்வு செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் தூத்துக்குடி வர உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி: கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், அரபிக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று வரை இக்கட்டான சூழ்நிலையிலேயே உள்ளது. அதிலும், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில், திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் மழை வெள்ளத்தால் சிக்கிக் கொண்டது. இதில் இருந்து முதலில் 300 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து மாற்று ரயிலில் சென்னை எழும்பூர் வந்தடைந்தனர்.

இதனிடையே, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன. இருப்பினும், சில கிராமங்கள் இன்று வரையில் மின்தடை, வெள்ள நீர் வடியாமல் பாதிப்படைந்து காணப்படுகிறது. இதனிடையே, மத்திய அரசு நிவாரண நிதியை சரியாக வழங்கவில்லை எனவும், வானிலை முன்னறிவிப்புகள் மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பேரிடர் நிவாரணத் தொகை இரு தவணைகளாக தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டதாகவும், வானிலை முன்னறிவிப்புகள் டிசம்பர் 12 முதல் முறையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

மேலும், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கும் மத்திய நிதியமைச்சர் பதில் அளித்து, நாகரிகமாக பேச வேண்டும் என்றார். இது மீண்டும் புயலைக் கிளப்ப, ‘அப்பன் என்பது கெட்ட வார்த்தையா?’ என கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல், 9 ஆண்டுகால பாஜக ஆட்சியே பேரிடர்தான் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

மேலும், மத்திய அரசினால் விடுவிக்கப்பட்ட நிவாரணத் தொகையின் பட்டியலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதேநேரம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், வெள்ள மீட்புப் பணிகளை அரசு சரியாக கையாளவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (டிச.26) தூத்துக்குடி வர உள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் வெளியிட்டுள்ள X பதிவில், “வருகிற 26ஆம் தேதி அன்று பிற்பகல் 12.30 மணிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். தொடர்ந்து, பிற்பகல் 2 மணியளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் ஆய்வு செய்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் உடனான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து மோதல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது தூத்துக்குடி வருகை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க:9 ஆண்டுகால பாஜகவின் ஆட்சியே பேரிடர்தான் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details