தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் கோயிலில் ஆற்காடு நவாப்பு மன்னர்களின் செப்பேடுகள் - கோயில் தொண்டில் இஸ்லாமியர்களின் பங்கு என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 12:39 PM IST

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் அசாது நாவாப்பு சாய்பு பெயரில் அரிய தமிழ்ச் செப்பேடுகள் இரண்டை இந்து சமய அறநிலையத்துறை சுவடியியல் திட்ட பேராசிரியர் தாமரைப் பாண்டியன் கண்டறிந்துள்ளார்.

விநாயகர் கோயிலுக்கு செப்பேடுகளை தானமளித்த ஆற்காடு நாவாப்பு மன்னர்கள்
விநாயகர் கோயிலுக்கு செப்பேடுகளை தானமளித்த ஆற்காடு நாவாப்பு மன்னர்கள்

தூத்துக்குடி: இந்து சமய அறநிலையத்துறையின் சுவடித் திட்டப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டப் பணியில் இதுவரை 676 கோயில்களில் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் இருப்பு குறித்து களஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கள ஆய்வின் மூலம் செப்பேடுகள் 9, செப்புப் பட்டயங்கள் 34, வெள்ளி ஏடுகள் 2, தங்க ஏடு 1 ஆகியவை கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் கண்டறியப்பட்ட செப்பேடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இக்கோயிலில் கண்டறியப்பட்ட 2 செப்பேடுகளில் உள்ள செய்திகள் குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் ஆய்வு செய்துள்ளார்.

விநாயகர் கோயிலுக்கு செப்பேடுகளை தானமளித்த ஆற்காடு நாவாப்பு மன்னர்கள்

அதிலுள்ள செய்திகள் குறித்து அவர் கூறியதாவது, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் செப்பேடுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவையாகும். செப்பேடுகள் அசாது நவாப்பு சாய்பு என்ற இசுலாமியருக்குப் புண்ணியம் கிடைத்திடச் செய்யப்பட்ட தானம் பற்றிப் பேசுகின்றன.

ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கருநாடகப் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழ்நாடு வரலாற்றில் இவர்கள் கருநாடக நவாப்புகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சிக் காலத்தில் தான் மொகலாய மன்னர்கள் உதவியுடன் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர்.

நவாப்புகள் ஆட்சிக்காலத்தில் நவாப்புகள் பெயரில் இந்துக் கோயில்களில் பலவற்றுக்கு புண்ணிய தர்மக் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி குறவர் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நித்திய அபிஷேகம், நெய்வேத்தியம் நடப்பதற்கு லாலுகான் சாய்பு பெயரில் கி.பி.1759ஆம் ஆண்டு தானக் கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளமையினை நெல்லையப்பர் கோயிலில் உள்ள செப்புப் பட்டயம் ஒன்று தெரிவிக்கிறது.

அது போல குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கி.பி.1848ஆம் ஆண்டு நித்திய விழா பூஜை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறு காலப் பூசைக்கு அசாது வால சாயபு, இசுமாலி ராவுத்தர் முதலியோர் சேர்ந்து தானப்பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயிலில் உள்ள 2 செப்பேடுகளும் கி.பி.1774ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை ஆகும். இந்த இரண்டு செப்பேடுகளும் அக்காலத்தில் வாழ்ந்த ராச மானியார் அசாது நவாப்பு சாய்பு என்பவருக்குப் புண்ணியம் கிடைக்க ஆயிரத்தெண் விநாயகர் கோயிலுக்கும் மாறமங்கலம் சந்திரசேகர சுவாமி கோயில் திருப்பணிக்கும் திருப்பணித் தர்மக் கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்தர்மக்கட்டளையை ஆறுமுகமங்கலம் மகாசனங்களும் மாற மங்கலம் மகாசனங்களும் புதுக்கிராம மகாசனங்களும் பிள்ளைமார் குடியான பேர்களும் இருவப்பபுரம் வெள்ளோடை நஞ்சை பயிரிடுகிற குடியான பேரும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளனர்.

மேற்படியார் கிராம நஞ்சை பயிரேறின நிலத்துக்கு அறுப்படிபபுக்கும் அரண்மனைக்கும் குடிகளுக்கும் பொதுவாகப் போர் 1க்கு நெல் 1/ 20( ஒருமா) வழங்க வேண்டும். மேலும் கோயில் கட்டளைப்படியாகப் போர் 1க்கு1/20 ( ஒருமா) படி நெல் வீதம் வழங்கி திருப்பணி தர்மம் தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என்றும் முதல்பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் செப்புப் பட்டயத்தின் இறுதியில் 30 நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது செப்புப் பட்டயத்தின் முன்பகுதியிலும் இச்செய்தி அப்படியே கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஆயிரத்தெண் விநாயகர் கோயிலுக்கு கிரைய சாசனம் அடிப்படையில் வாங்கி வாகன கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு விவரம் 1/2 1/8 (அரைஅரைக்கால்) ம் அரண்மனையில் இரு ரெட்டிப்பாட்டம் விவரம் 1/2 1/8 (அரை அரைக்கால்)க்கும் ஒண்ணேகால் கோட்டை நெல் வாங்கிக்கொண்டு திருப்பணி நடத்தி வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சாம்பிராணிக் கட்டளைக்கு சுத்த மானியம் அரையும் விட்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாகன கட்டளைக்கு ஒழுகுபனையைக் கிரைய சாசனத்துக்கு வாங்கிக் கொண்டும் அரண்மனைப் பொறுப்பாக அஞ்சு பணம் வாங்கிக் கொண்டும் திருப்பணி தர்மத்தை நடத்தி வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாறமங்கலம் களத்தில் வருகிற போருக்குள்ள நெல்லும் அந்தக் கிராமத்திலுள்ள பொறுப்பு விவரம் 3/4 (முக்கால்)ம் சந்திரசேகரர் கோயில் திருப்பணி தர்மத்துக்கு வழங்கிட திருப்பணிக் கட்டளை ஒன்றை ஆனந்தராயர் அவர்களின் காரியகர்த்தாவான இராமச்சந்திரய்யனும் சம்பிரிதி மாலைப் பிள்ளை, நாட்டுக் கணக்கு தெய்வநாயகம் பிள்ளை ஆகியோர் ஏற்படுத்தியுள்ளனர்.

அதுபோல சபாபதி ஏழாந்திருவிழா மண்டகப்படிக்கட்டளைக்கும் திருவாதிரை கட்டளைகளுக்கும் நாட்டுக்கணக்கு தெய்வநாயகம் பிள்ளை கல்மடை பாய்ச்சலில் கனியா முடங்கன் கலி 1ஆம் நெல் 1/2 1/6 (அரை மாகாணி) ம் நாலாம் புளிப்பனை விளையும் கட்டளைக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

சுவாமி ஆயிரத்தெண் விநாயகருக்குத் தாண்டவராய முதலியார் நெய்விளக்கு கட்டளைக்கு விட்டுக் கொடுத்தது புதுக் கிராமம் மகாசனங்கள்கிட்ட ஒத்துக்கொண்ட சிறு கால சந்திக்கு மூலைவயல் நெல் 1/4 (கால்) படியும் அதிலுள்ள நிலமும் அரண்மனைப் பொறுப்பு நெல் 1க்கு விவரம் 2 வீதம் அஞ்சு பணம் பொறுப்பாய் வாங்கி வழங்கி நெய்விளக்கு கட்டளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போன்ற செய்திகள் செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி, நெல்லையில் ரூ.6000 நிவாரணம்; மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

ABOUT THE AUTHOR

...view details