தமிழ்நாடு

tamil nadu

நெல்லை அருகே கோர விபத்து: ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 12:34 PM IST

Updated : Dec 31, 2023, 12:41 PM IST

Thoothukudi Van Accident: தூத்துக்குடி மாவட்டம் கீழ வல்லநாடு பகுதியில் வேன் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், உத்தரபிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tourist van accident in tuticorin
தூத்துக்குடி அருகே கோர விபத்து

தூத்துக்குடி: உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 30 கொண்ட குழுவினர் தென் தமிழகத்திற்கு ரயிலில் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்து அங்கு பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு அங்கிருந்து இரண்டு தனியார் வேனை வாடகைக்கு எடுத்து தூத்துக்குடி வழியாகக் கன்னியாகுமரிக்கு செல்வதற்காக நேற்று (டிச.30) ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று (டிச.31) அதிகாலை தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சென்ற போது கீழ வல்லநாடு துணை மின் நிலையம் அருகே எதிரே தவறான பாதையில் வந்த டிப்பர் லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வேன் மீது மோதியதில் வேன் அருகில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணி அளவில் விபத்து நடைபெற்றதால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. எனவே பின்னால் மற்றொரு வேனில் வந்த நபர்கள் விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியாமல் பரிதவித்துள்ளனர்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீசார் சம்பவ விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டனர். அப்போது வேனில் இருந்தவர்கள் உத்தரபிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் சுமன், பார்வதி ஆகிய இரண்டு பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

பின்னர், படுகாயமடைந்த 16 பேரை மீட்ட போலீசார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அதில் ஒரு வயது குழந்தை ஸ்ரீ என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் இறந்த மூன்று பேரின் உடலும் அதே நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர் மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர். இதற்கிடையில் உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது உடலை இங்கிருந்து எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று (டிச.31) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற்கூறாய்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக உடற் கூறாய்வு செய்து உடலைப் பத்திரமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:மாநில எல்லையில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? ஐஜி பவானீஸ்வரி முக்கிய தகவல்..

Last Updated : Dec 31, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details