தமிழ்நாடு

tamil nadu

பொங்கலோ..பொங்கல்.. புத்தாடை உடுத்தி பாரம்பரியப்படி பொங்கலிட்டு அசத்திய வெளிநாட்டினர்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 1:10 PM IST

Foreigners celebrated Pongal: தூத்துக்குடியில் வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர்.

Foreigners celebrated Pongal festival in Tamil Nadu
தமிழர் முறைப்படி வேட்டி சேலை குலவையோடு, புத்தரிசி பொங்கலிட்டு அசத்திய வெளிநாட்டினர்

தமிழர் முறைப்படி வேட்டி சேலை குலவையோடு, புத்தரிசி பொங்கலிட்டு அசத்திய வெளிநாட்டினர்

தூத்துக்குடி:சென்னையில் உள்ள கிளாசிக் ரன் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 17 வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் ‘ஆட்டோ சேலஞ்ச்’ என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. இந்தியாவை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலாப் பயணம் கடந்த டிச.28 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.

இதில் நியூசிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 4 நாடுகளைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 26 பேர் கலந்து கொண்டு ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர் மதுரை ஆகிய ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இன்று (ஜன.4) தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற பனிமய மாதா ஆலயம், முத்து நகர் கடற்கரை, உப்பளங்கள் ஆகியவற்றை கண்டு ரசித்த பின்னர், சாயர்புரத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவதற்காக வந்தனர்.

வெளிநாட்டினரை வரவேற்கும் விதமாக தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டு சிறந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, 9 அணிகளாக பிரிந்து பொங்கல் போட்டியில் கலந்து கொண்டனர். தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பானை, பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை போட்டு தமிழர் முறைப்படி பொங்கல் வைத்தனர்.

பானையில் பொங்கல் பொங்கி வரும் போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு குலவை சத்தமும் எழுப்பி அசத்தினர். பின்னர், பொங்கல் வைத்து முடிக்கப்பட்டதும், அந்தந்த அணியினர் வைத்த பொங்கலை வரிசையாகத் தட்டில் வைத்தனர். வெளிநாட்டினர் வைத்த பொங்கலைச் சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியைத் தேர்வு செய்தனர்.

முதல் பரிசாக செவ்வாழை, இரண்டாம் பரிசாக மலை ஏத்தன், மூன்றாம் பரிசாக பச்சை வாழைக்குலைகள் போன்றவை வழங்கப்பட்டன. அத்துடன் மாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம், பேரிக்காய், ரம்பூட்டான் உள்ளிட்ட பழ வகைகளும், பதனீர், இளநீர், பழச்சாறு, பனங்கிழங்கு ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இவற்றையும் உண்டு மகிழ்ந்த வெளிநாட்டினர், தாங்கள் தயாரித்த பொங்கலையும் கிராம மக்களுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, தாங்கள் தயாரித்த இனிய பொங்கலை கிராம மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். இது குறித்து, இந்தச் சுற்றுலாவின் ஒருங்கிணைப்பாளர் பிரின்லி ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கையில், வெளிநாட்டினர் நமது கலாசாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆட்டோ சேலஞ்ச் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்.

இது குறித்து வெளிநாட்டினர் கூறுகையில், “தமிழர்களின் கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும் போது தனி மரியாதை கிடைக்கிறது. இங்கு எல்லாரும் ஒன்று கூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஒன்று” என கூறினர். மேலும், இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர் வரும் 6 ஆம் தேதி அங்கிருந்து அவரவர் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி அருகே 790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details