தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலாயத்தின் 441வது திருவிழா கொடியேற்ற பவனி தொடங்கியது!

By

Published : Jul 26, 2023, 12:18 PM IST

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலாயத்தின் 441வது திருவிழா கொடியேற்றம் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

basilica our lady of snows
தூய பனிமய மாதா பேரலாயம்

தூய பனிமய மாதா பேரலாயத்தின் 441வது திருவிழா கொடியேற்ற பவனி

தூத்துக்குடி:தூத்துக்குடியில், அமைந்துள்ள புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ - மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும். இங்கு கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், முஸ்லீம் மக்களும் பிராத்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு, தங்கள் பிராத்தனை நிறைவேற மெழுகுவர்த்தி ஏந்தி அன்னையை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவை தரிசிக்க பக்தர்கள் வருவார்கள். அதன்படி, 441வது திருவிழா இன்று (ஜூலை26) தொடங்கப்பட்டது.

இதன்படி, காலை 5 மணிக்கு திருப்பலியும், 5.45 மணிக்கு 2ஆம் திருப்பலியும் நடைபெற்று ஆலயத்தின் முன் உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ பனிமய மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலமாகத் தொடங்கியது.

கொடி ஏற்றப்படும்போது விண்ணுயர பனிமய அன்னையை வேண்டி குரல் எழுப்பியும், சமாதானப் புறாக்களை பறக்கவிட்டும் விழா தொடங்கப்பட்டது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 50 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணியும் 4 உயர் கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு பணியும், மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சாதாரண உடையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பொது மக்கள் கூறுகையில், “மாதா கோயில் கொடியேற்றம் சிறப்பாக ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். சாதி, மதம் அப்பாற்பட்டு அனைத்து மக்களும் கலந்து கொள்வர். மேலும், பொதுமக்கள் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தும் வண்ணம் பழம், பால், லட்டு கொடுத்து வருகின்றனர்.

வருடம் தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக கூடிக்கொண்டே உள்ளது. மாதாவின் ஆசி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்” என கூறினார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 வருடத்திற்குப் பின் 16வது முறையாக ஆகஸ்ட் 5 அன்று தங்கத்தேர் பவனி நடைபெற இருக்கிறது. இதில், தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரத்தால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - சுற்றுலாத்துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details