தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளை 'தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 9:34 AM IST

Union Finance Minister Nirmala Sitharaman: தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை எனவும் தமிழ்நாடு அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Finance Minister Nirmala Sitharaman inspection thoothukudi
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 17, 18 ஆம் தேதி அதிகனமழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஏரல், ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சோதம் ஏற்ப்பட்டது.

இந்நிலையில், 9 நாட்களுக்கு பின்னர் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று (டிச.26) தூத்துக்குடி வந்தார்.

முன்னதாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்திற்கு பின் குறிஞ்சி நகர், கோரம்பள்ளம் கண்மாய், அந்தோணியார் புரம் பாலம் உடைப்பு, முறப்பநாடு குடிநீர் தொட்டி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மனத்தி பகுதியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்து ஏரல் ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு அப்பகுதி வியாபாரிகள் தங்களது வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும் மற்றும் 'முத்ரா திட்டம்' போல, வட்டி இல்லா கடன் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கை மனுவையும் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது புன்னக்காயல் பகுதியை சேர்ந்த மீனவர் சங்க துணை தலைவர் ராபர்ட் தலைமையில் வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள், அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், 'தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் நாங்கள் வசிக்கிறோம். ஆற்றைச் சுற்றி சுற்றுசுவர் கடல் பகுதிக்குள் தூண்டில் வளைவு அருகில் செல்லும் வரையில் பாதுகாப்பாக தண்ணீரை கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியரை வர சொல்லுமாறு, நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த நிலையில், ஆட்சியர் லெட்சுமிபதி ஏரல் ஆய்வு முடிவதற்கு முன்னதாகவே அடுத்த ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வேக வேகமாக ஏரல் பஜார் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் வந்து சேர்ந்தார். அப்போது அங்கு வந்திருந்த ஆட்சியரிடம் நிர்மலா சீதாராமன் மீனவர்கள் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர், உமரிக்காடு என்ற பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற போது அங்குள்ள பொதுமக்கள் சிலர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், 'தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நீங்கள் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், 'வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வாய்ப்பே இல்லை. மாநில அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்வோம். மற்றபடி தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரைக்கும் தேசிய பேரிடர் என எப்போதும் அறிவிக்கப்பட்டதே இல்லை' என தெரிவித்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டப் பலரும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:மத்திய நிதியமைச்சருக்கு கொக்கி போட்ட பிரேமம் பட இயக்குநர்: வலைத்தளங்களில் வைரலாகும் அல்போன்சின் கேள்விகள்!

ABOUT THE AUTHOR

...view details