தமிழ்நாடு

tamil nadu

ஓபிஎஸ், ஈபிஎஸ் லஞ்ச ஊழல் பட்டியல் விரைவில் வெளியீடு - அர்ஜுன் சம்பத் கூறியது என்ன?

By

Published : Apr 3, 2023, 1:35 PM IST

ஏப்ரல் 14-ஆம் தேதி லஞ்ச ஊழல் பட்டியல் வெளியிட போவதாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் பட்டியலையும் சேர்த்து வெளியிடுவார் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hindu People's Party leader Arjun Sampath
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்

ஓபிஎஸ், இபிஎஸ் லஞ்ச ஊழல் பட்டியலும் விரைவில்... அர்ஜுன் சம்பத் கூறியது என்ன?

தூத்துக்குடி: சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்த குமார் தலைமையில், நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் அர்ஜுன் சம்பத் பேசுகையில், "முன்னாள் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை ஆளுநர் ஆகி இருக்கிறார். பொன் ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரி ஆனார். இதனை திமுகவினரால் தாங்க முடியவில்லை. செருப்பு எடுத்து வீசினார்கள். மக்கள் அதிகாரம், கம்யூனிஸ்ட் கிறிஸ்துவ பாதிரியாரோடு சேர்ந்து கொண்டு எதிர்த்தனர். நாடார் சமுதாயத்தினர் மந்திரி ஆக கூடாதா? தமிழிசையை கேவலப்படுத்தினார்கள். சீப்பு வாங்கி கொடு என தற்போதைய அமைச்சர் துரைமுருகன் பேசினார் என்றார்.

மேலும், திமுகவினர் கூறுகின்றனர், ஈவேரா பிறந்திருக்கவில்லை என்றால் தமிழிசை, சீமான் போன்றவர்களின் மூதாதையர்கள் மேலாடை அணிந்திருக்க முடியாது என்று. திருநெல்வேலி நாடார்களை இழுப்புப் படுத்தினார்கள். மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் பல பிரிவுகளாக இருக்கின்றோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏப்ரல் 14 லஞ்ச ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கின்றார். பட்டியலை வெளியே விடுவதாக சொன்னதுடன் எங்களை மட்டும் ஏன் சொல்கிறீர்கள்? அதிமுகவைக் கூறவில்லை என்று கூறி வருகின்றனர். நான் ஊழல் பண்ணவில்லை, உதயநிதி, ஸ்டாலின் ஆகியோர் ஊழல் பண்ணவில்லை என்று கூற மறுக்கின்றனர். ஆனால், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் பட்டியலையும் வெளியிட மாட்டீர்களா அவர்கள் ஊழல் செய்யவில்லையா எனக் கேட்கின்றனர். தற்போது சொல்கிறேன் அவர்கள் பட்டியலையும் சேர்த்துத் தான் வெளியிடுவார் அண்ணாமலை.

திராவிடத்திற்கு, லஞ்ச ஊழலுக்கு மாற்று தான் நாங்கள். பிரதமர் மோடி ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஆகியவை இடமில்லை, நல்லாட்சி நாயகன் மோடியின் ஆட்சி செங்கோட்டையில் உள்ளது. இதைச் சென்னை கோட்டைக்குக் கொண்டு வருவது தான் இந்து தர்ம மாநாட்டின் நோக்கம்" என்று கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.தமிழ்நாட்டில் உள்ள தெற்கு மாவட்டங்களை நிர்வாக வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டு தனி மாநிலமாக பிரித்து அறிவிக்க வேண்டும்.

2.தமிழகத்தில் கடலோரப் பகுதியில் வசிக்கும் பாரம்பரியமான இந்து தமிழ் மீனவ சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ அவர்களுக்கு தென் மாவட்டங்களில் உரிய அரசியல் அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

3. கல் திறக்க அனுமதி வழங்கி அதை பனை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அரசு அதனை சந்தைப்படுத்துதல் வேண்டும்.

4. பனை மரங்களை பாதுகாக்க ஒரு மாவட்டத்திற்கு ஒரு கோடி பனைவிதைகளை விதைக்க வேண்டும்.

5. தேவேந்திர குல மக்களின் பட்டியலினதிலிருந்து வெளியேற்ற கோரிக்கை நிறைவேற்றி அதனை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

இதையும் படிங்க: "திமுக வந்தாலே மின்தடை; நிர்வாகத் திறமை இல்லாத பொம்மை முதல்வர் ஸ்டாலின்" - எடப்பாடி பழனிசாமி விளாசல்!

ABOUT THE AUTHOR

...view details