தமிழ்நாடு

tamil nadu

டோல்கேட் கட்டண உயர்வால்தான் விலைவாசி உயர்கிறது - விக்கிரமராஜா

By

Published : Mar 19, 2023, 4:31 PM IST

டோல்கேட் கட்டண உயர்வால் தான் விலைவாசி உயர்கிறது என்றும், வருமானவரித் துறையினர் வணிகர்களின் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தி வருவதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

வருமானவரித் துறையினரின் சோதனை தொடர்பாக அரசிடம் கோரிக்கை - விக்கிரமராஜா
வருமானவரித் துறையினரின் சோதனை தொடர்பாக அரசிடம் கோரிக்கை - விக்கிரமராஜா

வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பு

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் 37வது வணிகர் சங்கங்களின் ஆண்டு விழா இன்று (மார்ச் 19) நடைபெற்றது. இந்த விழாவில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விக்கிரமராஜா, “வருகிற மே 5ஆம் தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு ‘வணிகர் உரிமை முழக்க மாநாடு’ என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சாமானிய வியாபாரிகளைக் காப்பாற்றும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என அந்த மாநாட்டில் பிரகடன தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசு சாமானிய வணிகர்களை வேறு பார்வையில்தான் நிச்சயமாகப் பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதை மதுரை நீதியரசர்கள் கண்டித்துள்ளனர். சாமானிய வியாபாரிகளை ஒரு பார்வையாகவும், கார்ப்பரேட் வியாபாரிகளை ஒரு பார்வையாகவும் மத்திய அரசு பார்த்து வருகிறது. மேலும் ஆன்லைன் வர்த்தகத்தால் சாமானிய வியாபாரிகள் தடுமாறி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கும் விதமான ஆன்லைன் தடைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். குறிப்பாக டோல்கேட் கட்டண உயர்வால் வியாபாரிகள் மட்டுமல்லாது, சாமானிய பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காலாவதியான டோல்கேட்கள் மூடப்படும் என்று அறிவித்தது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. எனவே, உடனடியாக காலாவதியான டோல்கேட் அனைத்தையும் மூடி, சாமானியப் பொதுமக்களைக் காக்க வேண்டும்.

டோல்கேட் கட்டண விலை உயர்வால், விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில், சுமார் 70 சதவீத அளவிற்கு வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் பொய்யானத் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறையும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்து வருகிறது.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி ஆகியவற்றில் உள்ள கடைகளில் வரி உயர்வை முறைப்படுத்த தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில், கடைகளில் வாடகை உயர்வு முறையாக தீர்மானிக்கப்படும். குறிப்பாக வணிகர்களுக்கு செஸ் வரியை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது.

வருமானவரித் துறையினர் வணிகர்களின் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி வருவதை, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, வணிகர்கள் பாதிக்காத வண்ணம் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உணவுப் பாதுகாப்பு சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் - விக்கிரமராஜா

ABOUT THE AUTHOR

...view details