தமிழ்நாடு

tamil nadu

'பழங்குடி இன மக்களுக்கு தோளோடு தோளாக இன்றைக்கும் என்றைக்கும் நிற்கும் இயக்கமாக திமுக இருக்கும்' - உதயநிதி

By

Published : Jul 19, 2023, 4:25 PM IST

திருவண்ணாமலையில் மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெறும் கோடை விழாவை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட உருவங்களைப் பார்வையிட்டார்.

Etv Bharat
Etv Bharat

'இன மக்களுக்கு தோளோடு தோளாக இன்றைக்கும் என்றைக்கும் நிற்கும் இயக்கமாக திமுக இருக்கும்' - உதயநிதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டம்ஜவ்வாது மலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் கோடை விழா நடைபெறுகிறது. இந்த கோடை விழாவின் முதல் நிகழ்வாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமுத்தூர் பகுதியில் அமிர்தி செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 2 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடத்தினை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஜூலை 18) திறந்து வைத்தார்.

இதனையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெறும் கோடை விழாவை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட உருவங்களைப் பார்வையிட்டார். பின்னர், பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த பல்பொருள் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதன் பின்பு நடைபெற்ற கோடை விழாவில் சுமார் 86 ஆயிரத்து 708 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், 550.68 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ஆகிய பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி , ''மற்ற கோடை விழாக்களை விட இந்த கோடை விழா மாநாடுபோல் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம். உதயநிதி ஸ்டாலினை மக்கள் மிகப்பெரிய நடிகனாகவும், அமைச்சராகவும் ஏற்றுக்கொண்டு உள்ளதால்தான் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டு வந்துள்ளது'' என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ''எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மலைவாழ் மக்கள் பயனடைந்து வருவதாகவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி மலைவாழ் மக்களுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி,''எல்லோருக்கும் எல்லாம் பெற்றுத் தர வேண்டும் என்பது தான் திராவிட மாடலின் நோக்கம். அந்த வகையில் திராவிட இயக்கம் பழங்குடி இன மக்களுக்கு தோளோடு தோளாக இன்றைக்கும், என்றைக்கும் நிற்கும் இயக்கமாக திமுக இருக்கும் என்றும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியிலும் சரி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியிலும் சரி, பழங்குடி இன மக்களுக்காக எண்ணற்ற பணிகளை திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்டு உள்ளது.

பழங்குடி இன மக்களுக்காக தனி இட ஒதுக்கீடாக 68 சதவீதத்தில் இருந்து 69 சதவீதம் உயர்த்திக் கொடுத்ததும் கருணாநிதியின் திமுக ஆட்சிதான். தற்போதைய முதலமைச்சர் பழங்குடியின மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என பார்த்து பார்த்து தந்து கொண்டு உள்ளதாகவும், பழங்குடி மக்கள் சாதிச் சான்று பெற தெளிவான வழிமுறைகளை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது'' எனவும் கூறினார்.

இந்தக் கோடை விழா நிகழ்ச்சியில் கூட 2,130 பழங்குடி இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பழங்குடி இன மக்கள் தேவையை அறிந்து கடந்த இரண்டு வருடங்களில் 5,875 குடியிருப்புப் பகுதிகள் மற்றும் 2 லட்சத்துக்கும் மேல் பழங்குடியினருக்கு வீடுகள் தேவை என அறிந்து கான்கிரீட் வீடுகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள் வீட்டு மனைப் பட்டாக்கள், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்டப் பல்வேறு நலத் திட்டங்கள் திராவிட முன்னேற்றக் கழக அரசால் வழங்கப்பட்டு வருகிறதாகவும் தெரிவித்தனர்.

கருணாநிதி ஆட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக மலைவாழ் மக்களுக்கு மின் இணைப்பு வழங்கிய அரசு, திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றும், தற்போதுதான் இந்தியாவில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மின் இணைப்புகள் வழங்க பல ஆட்சியாளர்கள் அறிவித்து வந்துள்ளனர் என்றும் உரையாற்றினார்.

மறைந்த கருணாநிதி, மலைக் கிராமங்களில் உறைவிடப் பள்ளிகளை திறந்து வைத்து சாதனைப் படைத்தார் என்றும், இதன் மூலம் மலைவாழ் மக்களில் இருந்து எண்ணற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகியுள்ளார்கள் என்றும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மலைவாழ் மக்கள் நிம்மதியாகவும், தங்களது அடையாளத்தை தொலைக்காமலும் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்று அவர் கூறியுள்ளார்.

“மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்து அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அடையாளம் கண்டு விளையாட்டுத் துறையில் வாய்ப்புகளை நிச்சயம் விளையாட்டுத் துறை அமைச்சரான நான் பெற்றுத் தருவேன்” என்றும் கூறினார்.

மேலும், “ஸ்டாலின் முதலமைச்சராகிய இரண்டு ஆண்டுகளில் ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக புதுமைப்பெண் திட்டம், மகளிர் சுய உதவி குழுகளுக்கு 1,750 கோடி ரூபாய் கடன் உதவி அளித்துள்ளார். இல்லம் தேடி கல்வி, மற்றும் ஜவ்வாது மலையை சுற்றுலாத்தலமாகவும் அறிவித்துள்ளது” எனவும் கூறினார்.

இந்த அரசு பொறுப்பேற்று 39 நியாய விலைக் கடைகளை அமைத்துள்ளதாகவும், மேலும் 8 கோடியை 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜவ்வாது மலையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். பரமனந்தல் முதல் அமிர்தி வரை 67 கிலோ மீட்டருக்கு புதிய சாலை அமைக்க 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் வனத்துறையின் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும் என்றும், இது போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த திராவிடம் மாடல் அரசியலில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி,மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details