தமிழ்நாடு

tamil nadu

போலி நிருபர்களைக் கைது செய்யக்கோரி பத்திரிகையாளர்கள் புகார்!

By

Published : Aug 5, 2020, 6:12 PM IST

திருவண்ணாமலை: போலி நிருபர்களைக் கைது செய்யக்கோரி, காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலி நிருபர்களை கைது செய்யக்கோரி, காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் புகார்
போலி நிருபர்களை கைது செய்யக்கோரி, காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் புகார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு எதிராக பல குற்றங்களை செய்து வரும் நபர்கள் போலியாக பத்திரிகையாளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, செங்கம் பகுதியில் உலா வருவதாகவும் பொது மக்களிடையே சென்று தான் ஒரு பத்திரிகையாளர் என மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செங்கம் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். இவர் அவ்வப்போது செங்கம் பகுதிகளில் மணல் கடத்திக்கொண்டு வரும்போது காவல் துறையினரிடம் பிடிபட்டால், தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், தன்னைப் பார்த்தால் திருடன் போல் தெரிகிறதா என வீர வசனம் பேசி, சுலபமாக அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவாராம்.

இதேபோன்று சுமார் ஒரு ஆண்டாக தினக்கதிர் என்ற ஒரு பத்திரிகையின் பெயர் கொண்ட அடையாள அட்டையை போலியாக தயார் செய்து, தனது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் 'பிரஸ்' என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, பொதுமக்களை மிரட்டிப் பணம் வசூல் செய்து கொண்டு வலம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போலி நிருபர்களை கைது செய்யக்கோரி பத்திரிகையாளர்கள் புகார்

தொடர்ந்து கிராமப்பகுதிகளில் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அனைவரையும் மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும், இந்தப் போலி நிருபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆய்வாளர் சாலமன் ராஜா உறுதி அளித்துள்ளார்.

கரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து செய்தி சேகரிக்கும் பல பத்திரிகையாளர்களுக்கு மத்தியில்; இது போன்ற போலி பத்திரிகையாளர்களும் உலாவுவது அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுத்திவிடும் என்பதால், விரைந்து நடவடிக்கை எடுக்க செங்கம் பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details