தமிழ்நாடு

tamil nadu

குறைந்தப்பட்ச ஆதார விலை சட்டம் நிறைவேற்றக் கோரி விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

By

Published : Jan 18, 2021, 11:30 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில், குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜன.21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் மறைந்த ஞானசேகரன் உருவச்சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு ஞானசேகரனின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "மூன்று வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி போராடிவரும் விவசாயிகள் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி லட்சக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணியை டெல்லியில் நடத்த முடிவுசெய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையிலாவது மோடி அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு விட்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

வேளாண்மை துறை சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது அது மாநில அரசுக்கான அதிகாரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்ற வகையில் மோடி அரசு இந்தச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாடு அரசு குறைந்தப்பட்ச ஆதார விலை சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 21ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

சசிகலாவின் வருகையால் தமிழ்நாட்டில் பெரும் தாக்கம் ஏற்படாது. சசிகலா விடுதலையாக உள்ள சூழ்நிலையில் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதிமுக மற்றும் அமமுக கட்சிகளுக்கு இடையே ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

கோவாக்சின் என்ற தடுப்பூசி மக்களிடத்தில் நம்பிக்கையை பெறவில்லை பிரதமர் நரேந்திர மோடியோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ தாமாக முன்வந்து முதலில் இந்தத் தடுப்பூசி போட்டிருந்தால் மக்களிடத்தில் நம்பிக்கை வந்திருக்கும்.

கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று அதற்கான அங்கீகாரம் பெறப்படாத நிலையில் அவசரம் அவசரமாக தங்களுக்கு வேண்டிய ஒரு மருந்து நிறுவனம் பாரத் பயோடெக் பயன்பெறும் நோக்கில் இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சாதாரண அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுகின்ற நடவடிக்கையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது.

தற்போதைய நிலையில் திமுக அதிமுக மற்ற கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களாக உள்ளவர்கள் தான் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். கூட்டணிக் கட்சிகள் உள்ளவர்கள் இன்னும் தேர்தல் பரப்புரையை தொடங்க வில்லை, அது அவசியமுமில்லை அவசரமும் இல்லை" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details