தமிழ்நாடு

tamil nadu

"திருவண்ணாமலை அமைச்சர் தனது நிலத்தை கொடுத்தால் சிப்காட் தொழிற்சாலை அமைக்கலாம்" - அன்புமணி ராமதாஸ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 7:40 PM IST

Anbumani Ramadoss: செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Anbumani Ramadoss
அன்புமணி ராமதாஸ்

PMK Leader Anbumani Ramdoss Press Meet

திருவண்ணாமலை: செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் 2,200 ஏக்கர் பட்டா விளை நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விளை நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தக் கூடாது.

திருவண்ணாமலை போன்ற பின் தங்கிய மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் நிச்சயம் தேவை. அதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் விவசாய நிலங்களை அழித்து வரும் தொழிற்சாலைகள் வேண்டாம். வேலை வாய்ப்புகள் வேண்டாம். அது முன்னேற்றம் கிடையாது. அப்படி தமிழக அரசு செய்தால் அது விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் துரோகமாக நான் பார்க்கிறேன்.

உலகில் உள்ள பல நாடுகளுக்கும் நான் சென்று உள்ளேன். அதனால், முன்னேற்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். விவசாயத்தை அழித்து முன்னேற்றம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. நாளைக்கு உண்ண நமக்குச் சோறு கிடைக்காது. தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் விவசாய நிலப்பரப்பு என்பது 48% இருந்து 36 விழுக்காடாக குறைந்துள்ளது.

குறிப்பாக, சொல்ல வேண்டுமானால் 42 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை நாம் இழந்து விட்டோம். விளைநிலங்களை எல்லாம் அழித்துவிட்டு நாளை நம்முடைய சந்ததியினர் சோற்றுக்கு என்ன செய்யப் போகிறார்கள். அந்த கூறு கூட உங்களுக்கு இல்லையா?. இங்கே இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர், போளூர், செங்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏராளமான தரிசு நிலங்கள் உள்ளன.

அங்கே கொண்டு வாருங்கள் உங்களுடைய தொழிற்சாலைகளை. முப்போகம் விளையக்கூடிய இந்த பொன்னான மண்ணை வீணாக்கி இதில் தொழிற்சாலை கொண்டுவர எப்படி ஆட்சியாளர்களுக்கு மனம் வருகிறது என்றார். விவசாயத்தை அழித்து வரும் முன்னேற்றம் நமக்கு வேண்டாம்.

அது உண்மையான முன்னேற்றம் கிடையாது. கோயம்புத்தூரில் உள்ள அன்னூர் பகுதியில் இதேபோன்று தொழிற்சாலையைக் கொண்டு வருவோம் என்று தமிழக அரசு அறிவித்தது அங்கே இருக்கக்கூடிய விவசாயிகள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு அன்னூரில் நிலம் எடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியது.

அப்படியானால் அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா? இங்கே திருவண்ணாமலையில் இருப்பவர்கள் பாவப்பட்ட மக்களா? நாங்கள் செய்த பாவம் என்ன?. இங்கே இருப்பவர்கள் விவசாய மக்கள் இவர்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது. விவசாயத்தை ஒழித்துக் கட்டினால் இந்த மக்கள் அகதிகளாக தான் செல்ல வேண்டும்.

இந்த மண்ணில் தான் எங்களுடைய பள்ளிக்கூடம், கோயில் உள்ளிட்ட அனைத்து விதமான வாழ்விடமும் இருக்கின்றது. எனவே, தமிழக அரசு தங்களுடைய கொள்கை முடிவை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாமக இந்த விஷயத்தை சும்மா விடாது. தொடர்ந்து போராடும். அதனால், விவசாயிகள் தைரியமாக இருங்கள் உங்கள் நிலங்களை எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

விவசாயிகளை எந்த ஊரிலாவது குண்டர் சட்டத்தில் அடைப்பார்களா? நமக்கு சோறு போடக்கூடிய கடவுள் விவசாயிகள். அப்படிப்பட்ட கடவுள்களை போய் சிறைச்சாலையில் அடைத்திருக்கிறீர்களே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி கிடையாதா? விவசாயிகள் என்ன கள்ளச்சாராயம் காய்ச்சினார்களா அல்லது மணல் கொள்ளை செய்தார்களா?.

திருவண்ணாமலையில் தமிழக அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு சொந்தமான நிலங்களை மட்டும் கொடுத்தாலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்சாலை தொடங்கலாம். விவசாய நிலங்களுக்காக போராடிய அருள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். உடனடியாக, தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என பாமக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இதே நிலைத் தொடர்ந்தால் தமிழ்நாட்டு மக்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அரிசியை கையேந்தி பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

இதையும் படிங்க:பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு ஜாமீன் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details