தமிழ்நாடு

tamil nadu

மாண்டஸ் புயல்: திருவள்ளூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை!

By

Published : Dec 9, 2022, 10:32 AM IST

மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

பலத்த காற்றுடன் கூடிய மழை
பலத்த காற்றுடன் கூடிய மழை

திருவள்ளூர்: தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தீவிரமடைந்து மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. தெற்கு தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.

புயலானது 12 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து வருவதால் இன்று (டிச. 9) நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரை கடக்கும் போது 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழை

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை அதி கனமழை பெய்யக்கூடும் என மாவட்டம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பானது சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

நேற்று (டிச.8) இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 35 அடியில் 33 அடி உயரம் நிரம்பியுள்ளது.

ஏரிக்கு நீர் வரத்து 595 கனஅடி ஆக உள்ளது. அணையில் இருந்து 457 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2,521 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 133 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டது.

அதற்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிப்புகளை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வாளர் ரவி தலைமையில் 40 பேர் கொண்ட வீரர்கள் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான பகுதிகளில் உள்ள நிவாரண மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் மாண்டஸ் புயல்: தமிழ்நாட்டில் 31 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்.. 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'

ABOUT THE AUTHOR

...view details