தமிழ்நாடு

tamil nadu

வீரலட்சுமியிடம் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சியினர்; வீரராகவ பெருமாள் கோயில் முன்பு பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 5:37 PM IST

Naam Tamilar Katchi: வீரராகவ பெருமாள் கோயிலில் தரிசனத்திற்காக வந்த வீரலட்சுமியுடன், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் கோயில் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Naam Tamilar Katchi supporters argue with veeralakshmi in front of Veera Ragava Perumal temple
வீரராகவ பெருமாள் கோயில் முன்பு வீரலட்சுமியுடன் நாம் தமிழர் கட்சியின் வாக்குவாதம்

வீரராகவ பெருமாள் கோயில் முன்பு வீரலட்சுமியுடன் நாம் தமிழர் கட்சியின் வாக்குவாதம்

திருவள்ளூர்:வீரராகவ பெருமாள் கோயிலில் இன்று தமிழர் முன்னேற்ற படை நிறுவனர் வீரலட்சுமி சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அப்போது பேசிய அவர், “விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இவர்களின் விவகாரத்தை நான் கையில் எடுத்து சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் முயற்சி செய்தேன்.

தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு எந்த ஒரு வெறுப்பும், விருப்பும் இன்றி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று உயர்ந்த எண்ணத்தில் அவர்களும் சட்ட ரீதியான நடவடிக்கையில் முயற்சி செய்தார்கள்.

ஒருவழியாக சீமானும், விஜயலட்சுமியும் சமாதானம் செய்து கொண்டார்கள். இது எமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயலட்சுமி விவகாரம் இத்துடன் நிரந்தரமாக முடிவுக்கு வந்தது. இந்த விவகாரம் வெற்றியடைய வேண்டும் என்று இந்த விவகாரத்தை நான் கையில் எடுத்தவுடன், திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வீரராகவ பெருமாளிடம் வேண்டி இருந்தேன். ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதாகவும் வேண்டியிருந்தேன்” என்றார்.

இதையும் படிங்க: சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி கடிதம்; ‘வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்’ - போலீஸ் தரப்பு

முன்னதாக வீரலட்சுமி சாமி தரிசனம் செய்ய வந்தபோது கோயிலுக்கு வெளியே அவரை மறித்த நாம் தமிழர் கட்சியினர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், “ஸ்கெட்ச் போட்டு தூக்கி விடுவேன் என்றீர்களே, இந்தாங்க ஸ்கெட்ச்” என அவருக்கு ஒரு ஸ்கெட்ச் கொடுக்க முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீசார் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது திடீரென வீரலட்சுமியின் ஆதரவாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சியினரை தாக்குவதற்கு முயன்றார். இதனையடுத்து இரு தரப்புக்கு இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினர். இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் கோஷமிடத் துவங்கினர்.

அப்போது ஆவேசமடைந்த வீரலட்சுமி, ‘நான் நூறு பேரை வரவழைக்கவா?’ என்றார். பின்னர் போலீசார் வீரலட்சுமியையும், அவரது ஆதரவாளர்களையும் சமாதானப்படுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். வீரராகவ பெருமாள் கோயில் முன்பு திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றதாக விஜயலட்சுமி கடிதம்; ‘வாபஸ் பெற்றாலும் சீமான் ஆஜராக வேண்டும்’ - போலீஸ் தரப்பு

ABOUT THE AUTHOR

...view details