தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூர் மாணவர் விடுதியில் முறைகேடு? விடுதிக்கு வராத மாணவர்களுக்கு கணக்கு காட்டியது அம்பலம்.. அமைச்சர் கயல்விழி நடவடிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 2:28 PM IST

Thiruvallur Student Hostel Malpractice: அரசினர் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வராத மாணவர்களுக்கு கணக்கு காட்டி முறைகேடு செய்ததாக அதிகாரி மற்றும் வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி காட்டமாக தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூர் மாணவர் விடுதியில் முறைகேடு
திருவள்ளூர் மாணவர் விடுதியில் முறைகேடு

திருவள்ளூர் மாணவர் விடுதியில் முறைகேடு

திருவள்ளூர்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி திருமழிசை அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் ஆதிதிராவிட நல மாணவர் விடுதியில் ஆய்வு செய்தபோது, விடுதியில் 66 மாணவர்கள் தங்கி படித்து வருவதாக அரசு வருகைப் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதனையடுத்து மாணவர்களுக்கான வருகைப் பதிவேட்டை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டி முடிக்கப்பட்ட போது இருந்த கட்டிடம், இன்றும் அதே நிலையில் பொலிவு மாறாமலும், வெள்ளை சுவர்கள் சற்றும் கரைபடியாமலும் அப்படியே இருந்துள்ளது. மேலும், அறைகள் அனைத்தும் காலியாக இருந்ததால் அதைத் தொடர்ந்து அமைச்சர் கயல்விழிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், மாணவர்கள் விடுதியை பயன்படுத்தியதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் காணப்பட்டதால் விடுதியின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த அமைச்சர், இல்லாத மாணவர்களுக்கு அண்டா அண்டாவாக உணவு சமைத்து வைத்திருந்த நிலையில், உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கும் அறை வரை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு இரண்டு நாட்களுக்கு தேவைப்படும் பொருட்கள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் கோபமான அமைச்சர் கயல்விழி, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவே, திரு திருவென முழித்த திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி செல்வராணி மற்றும் மாணவர் விடுதியின் வார்டன் அர்ஜுனன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுள்ளனர்.

கடைசியாக மாணவர்கள் வருகைப் பதிவேடு மற்றும் அவர்கள் சேர்க்கைக்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அதில் மாணவர்களின் அட்மிஷனுக்கான ஆவணங்களை எடுத்து, அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது, அதில் ஒரு மாணவரின் பெற்றோர் தனது மகன் தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், மேலும் விடுதியில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு அமைச்சர் கயல்விழி, விடுதி அருகே உங்கள் வீடு உள்ள நிலையில் உங்களுக்கு எதற்காக விடுதி தேவைப்படுகிறது என்று கேட்டதற்கு, பதில் அளிக்க முடியாமல் எதிர்முனையில் திணறி தொலைபேசியை கட் செய்துள்ளார் மாணவரின் பெற்றோர். அதேபோல் மற்றொரு மாணவரின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் விடுதியில் இருந்து பேசுவதாக தெரிவித்த நிலையில் பதிலளிக்க முடியாமல் அவரும் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அமைச்சர், வார்டன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை கடிந்து கொண்டார். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விடுதியில் பெற்றோர்கள் மாணவர்களை சேர்ப்பதாகவும், ஆனால் அவர்களை விடுதியில் தங்க வைப்பதில்லை எனவும் இதனால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர், விடுதிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான நோக்கமே மாணவர்கள் தங்கி படிப்பதற்காகத் தான் என்றும் வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்கள் கட்டாயம் விடுதியில் தங்கி படடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் என்றும் கூறினார். தொடர்ந்து, 66 மாணவர்களை சேர்த்துவிட்டு, அவர்கள் தங்காத நிலையில் போலியான கணக்கு எழுதிய வார்டன் மற்றும் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:சேலம் பிரியாணி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்.. ரவுடி கும்பலுக்கு திமுகவினர் ஆதரவு - கடை உரிமையாளர் புகார்..

ABOUT THE AUTHOR

...view details