தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்..கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:46 PM IST

Flood in Kosasthalaiyar River: தமிழகம் - ஆந்திரா எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 3வது முறையாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்..கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு அருகே தமிழக எல்லையில் உள்ள ஆந்திரா மேற்குத் தொடர்ச்சி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் 300 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், தமிழக எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் 3வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு இன்று (டிச.12) அதிகரித்துள்ளது.

பள்ளிப்பட்டு மேற்கு பகுதியில் அமைந்துள்ள லவா, குசா ஆறுகளில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள அதேநிலையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளம் கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், சமந்த வாடா கிராமத்தில் செல்லும் கொசஸ்தலை ஆற்றுத் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மிகவும் பழுதடைந்த தரைப்பாலமாக இருந்த இப்பாலம் முற்றிலுமாக, இந்த தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 10 கி.மீ. தூரம் மாற்றுப்பாதையில் அன்றாட தேவைகளுக்கு பள்ளிப்பட்டு பகுதிகளுக்கு வர வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக, இதுபோல் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சென்றால், இதே பகுதியில் உள்ள நெடியம் கொசஸ்தலை ஆற்றுத் தரைப்பாலமும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்படும் என்பது இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, மாற்று வழியை விரைவாக பொதுப்பணித்துறை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிக அளவு வெள்ள நீர் செல்வதால், பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் கரையோர கிராமங்களுக்குத் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறையினர், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்‌.

பள்ளிப்பட்டு பகுதி மக்களின் நீராதாரமாக விளங்கும் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வரும் கோடையில் விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இந்த வெள்ள நீர் சென்று மீண்டும் ஆந்திராவிற்குச் சென்ற பிறகு மீண்டும் தமிழக எல்லையில் உள்ள என்.என்.கண்டிகை, நல்லாடூர், ஆற்காடு குப்பம், வழியாக கொசஸ்தலை ஆற்று வழியாகத் திருவள்ளூர் அருகில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தைச் சென்றடைகிறது.

இதையும் படிங்க:எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்; பல்லுயிர் இழப்புகள் விரைந்து மதிப்பீடு செய்யப்படும் - சுப்ரியா சாகு தகவல்

ABOUT THE AUTHOR

...view details