தமிழ்நாடு

tamil nadu

சுதந்திர தின விழாவில் உள்கட்சி பூசலை உடைத்த கவுன்சிலர்கள்? மேயர் உரையை திமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பா?

By

Published : Aug 15, 2023, 11:00 PM IST

77th INDEPENDENCE DAY CELEBRATION: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து உள்கட்சி பூசலினால், மேயரை அவமதிக்கும் வகையில் திமுக கவுன்சிலர்கள் நிகழ்ச்சியின் பாதியிலே கலைந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் மேயர் உரையை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள்
நெல்லையில் மேயர் உரையை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள்

நெல்லையில் மேயர் உரையை புறக்கணித்த திமுக கவுன்சிலர்கள்

திருநெல்வேலி:சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அதே நேரத்தில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரது உரையை புறக்கணிக்கும் வகையில், கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜு மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திருநெல்வேலி மாநகராட்சி பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய மேயர் சரவணன் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். அவர் பேச ஆரம்பித்த போது திமுக மாமன்ற உறுப்பினர்கள், அவரது பேச்சை புறக்கணித்து எழுந்துச் சென்றனர். அனைவரும் மேயரின் பேச்சை புறக்கணித்து எழுந்து சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மாநகராட்சி மேயர் சரவணன் தொடர்ந்து தனது உரையை மேற்கொண்டார். இதனால் மேயர் பேசும்போது நிகழ்ச்சி மேடை காலியாக காட்சியளித்தது.

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும், மாநகராட்சி மேயருக்கும் இடையே தொடர்ந்து நிலவும் பனிப்போர் சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்து உள்ளது. இந்த பனிப் போருக்கு பின்னணியில் ஆளுங்கட்சியான திமுகவில் நிலவி வரும் உள்கட்சி பூசல் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருந்த அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம், திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான்.

தற்போதைய மேயர் சரவணன் தேர்தல் வெற்றிக்கு பிறகு, அப்துல் வகாப் தனக்கு வேண்டிய ஒரு நபரை மேயராக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது திட்டத்தை தவிடு பொடியாக்கும் வகையில், திமுக தலைமை யாரும் எதிர்பாராத வகையில் கவுன்சிலர் சரவணனை திருநெல்வேலி மேயர் வேட்பாளராக தலைமை அறிவித்தது. கட்சி தலைமை அறிவித்ததால் வேறு வழியின்றி அனைத்து திமுக கவுன்சிலர்களும் சரவணனை மேயராக தேர்ந்தெடுத்தனர்.

தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வகாப் தனக்கு கீழ் பணிந்து நடக்க வேண்டும் என மேயருக்கு பல்வேறு கட்டளைகளை விதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சி மூலம் போடப்படும் ஒப்பந்த பணிகள் தொடங்கி, அரசு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தான் சொல்வதை தான் கேட்டு நடக்க வேண்டும் என அப்துல் வகாப் மேயர் சரவணனுக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் மேயரின் வீட்டு பத்திரத்தை பறித்துக் கொண்டு மிரட்டியதாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆரம்பத்தில் அப்துல் வகாப்பின் கட்டளைக்கு இணங்கிய மேயர், பின்னாளில் தனி வழியில் செயல்பட தொடங்கினார். குறிப்பாக அப்துல் வகாப்பிற்கு எதிரணியாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய திமுக மாநில வர்த்தக இணைச் செயலாளருமான மாலை ராஜா மற்றும் திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியன் ஆகியோருடன் மேயர் சரவணன் கை கோர்த்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்துல் வகாப் தனது மாவட்ட செயலாளர் அதிகாரத்தை பயன்படுத்தி திமுக கவுன்சிலர்களை மேயருக்கு எதிராக குரல் கொடுக்க வைத்தார்.

தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் நெல்லை மாநகர திமுகவில் உள்கட்சி பூசல் வெடித்தது. குறிப்பாக திமுக பொதுச் செயலாளரும் அமைச்சரமான துரைமுருகன் நெல்லை வந்திருந்த போது, இடம் தகராறில் அவரது கண்முன்னே அப்துல் வகாப் ஆதரவாளர்கள் மேயர் சரவணனிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்துல் வகாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி, திமுக தலைமை அதிரடி காட்டியது. மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிபோனதால் அப்துல் வகாப் தரப்பிலிருந்து இனி தனக்கு நெருக்கடி வராது என்று எண்ணிய மேயர் சரவணனுக்கு, தொடர்ந்து அதிர்ச்சிகள் காத்திருந்தது.

அதாவது பதவி பறிக்கப்பட்டு பிறகும் அப்துல் வகாப் தொடர்ச்சியாக தனது ஆதரவு கவுன்சிலர் மூலம் மேயருக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக குற்றச்சட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது வரை மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக போராட்டம் நடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மன்ற கூட்டங்களின் போது, மேயர் அவைக்குள் வரும்போது அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் மேயருக்கு மரியாதை கொடுப்பது வழக்கம்.

ஆனால் உள்கட்சி பூசல் காரணமாக, முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்பின் ஆதரவு கவுன்சிலர்கள் மட்டும் மேயர் அவைக்கு வரும் போது இருக்கையை விட்டு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியிலும் மேயர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, அநாகரிகமாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். கட்சி ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், மேயர் என்பது உள்ளாட்சி அமைப்பின் கண்ணியமிக்க பொறுப்பு. கட்சி ரீதியாக சரவணனுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றாலும் மேயர் என்ற பதவிக்காது மரியாதை கொடுக்க வேண்டாமா என்று திமுக கவுன்சிலர்களை பார்த்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து மேயர் சரவணனை ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் பிரத்தியேகமாக தொடர்பு கொண்ட போது, "அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மாநகராட்சி அவையில் நீங்கள் வரும்போது கவுன்சிலர்கள் அவமரியாதை செய்வது குறித்து செய்தியாளர் கேட்டபோதும், "அப்படியும் ஒன்றும் கிடையாது என்று மழுப்பலாக" பதில் கூறினார்.

அதாவது அரசியல் லாபத்துக்காக தனது சொந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே தன்னை அவமரியாதை செய்தாலும் கூட இந்த பிரச்சனையை பெரிதாக்கினால் தனது பதவிக்கு சிக்கல் வந்துவிடும் என்பதில் மேயர் தெளிவாக இருக்கிறார் என கட்சியில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக உள் கட்சி பூசலைத் தாண்டி, மேயர் சரவணன் மீதும் பல்வேறு குற்றசாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

எனவே உள்கட்சி பூசல் மற்றும் மேயர் மீது உள்ள குற்றச்சாட்டு காரணமாக மேயரை மாற்றுவது குறித்தும் திமுக தலைமை ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே தான் தனக்கு ஏற்படும் அவமரியாதையை மேயர் வெளியே காட்டிக் கொள்ள தயங்குகிறார் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:‘மாநிலப் பட்டியலில் கல்வி’ - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details