தமிழ்நாடு

tamil nadu

தொடர்ந்து பலியாகும் உயிர்கள்: ஊர் நாட்டாமையின் கட்டப் பஞ்சாயத்தை முடித்து வைக்குமா மாவட்ட நிர்வாகம்?

By

Published : Aug 4, 2020, 8:55 PM IST

கௌதமபுரியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் பஞ்சாயத்து தலைவர் (நாட்டாமை) முன்னிலையில் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நாட்டாமை கூறும் தீர்ப்புக்கு ஊர் பொதுமக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இந்த பஞ்சாயத்து தீர்ப்பால் அவ்வூரில் அநேக குடும்பங்கள் பாதித்து வருகின்றன.

தொடர்ந்து பலியாகும் உயிர்கள்
தொடர்ந்து பலியாகும் உயிர்கள்

தமிழ்நாட்டின் பாரம்பரியமும் கலாசாரமும் இன்னமும் அழியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் கிராமங்கள்தான். ஆனால் கிராமங்களிலும் சில பிற்போக்குத்தனமான செயல்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இன்றைய நவீன யுகத்தில் உள்ளூர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், கிராமங்களில் புழக்கத்திலிருக்கும் மறைமுக நீதிமன்றங்கள் வழக்குகளை நிலுவையில் வைப்பதில்லை.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயிருக்கும் கௌதமபுரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு இன்றளவும் மறைமுக நீதிமன்றமாக ஊர் நாட்டாமை முறை செயல்பாட்டில் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமம் நாட்டமை பட பாணியில் மக்களை ஒதுக்கி வைப்பது, அபராதம் செலுத்தச் சொல்வது என மக்கள் மீது எதேசதிகாரம் செலுத்தி வருகிறது.

கௌதமபுரியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் பஞ்சாயத்து தலைவர் (நாட்டாமை) முன்னிலையில் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நாட்டாமை கூறும் தீர்ப்புக்கு ஊர் பொதுமக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

பஞ்சாயத்து தீர்ப்புகளின் விதம்

குற்றங்களுக்கு ஏற்ப நாட்டாமைகள் தண்டனை வழங்கி வந்த காலம் மலையேறி தற்போது, இந்த கிராம பஞ்சாயத்து கட்டப்பஞ்சாயத்தாக மாறத்தொடங்கியது. அதாவது ஊர் தலைவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு ஒரு விதமான தீர்ப்பும், வேண்டப்படாதவர்களுக்கு மற்றொரு விதமான தீர்ப்பும் என பாரபட்சத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் குற்றம் புரியாதவர்கள் பழி வாங்கப்பட்டனர், அதிகமான தண்டனைக்கு உள்படுத்தப்பட்டனர்.

கிராம பஞ்சாயத்து மூலம் தனிநபர் அதிகாரம் எடுத்துக் கொள்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதனால் ஊர் நாட்டாமை பஞ்சாயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்தது. இது தொடர்பாக பல்வேறு சம்பவங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் கூட கிராமத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்டப்படி தவறு என்று உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கௌதமபுரி கிராமத்தைச் சேர்ந்த ரவி(52) என்பவருக்கு இந்த ஊர் நாட்டாமை முறையால்தான் பெரிய பிரச்னை ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து ரவியின் வீட்டில் இரண்டு மரணங்கள். இதன் பின்னணி குறித்து ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டோம்.

மாற்றுத் திறனாளியான ரவிக்கு அவரது சகோதரன் மதியழகன்தான் முழு ஆதரவு. ரவிக்கு கால்தான் முழுமையாக செயல்படவில்லையே தவிர அவர் மனம் தைரியம் நிரம்பி வழியும் கோப்பை. ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்த இவருக்கு மனைவி வேலம்மாள், 3 மகள்கள்தான் உலகம், இவருடைய சகோதரன் மதியழகன் தான் பலம். ஆகவேதான், ஊரே அவருக்கு எதிராக இருந்தபோதும்கூட கற்தூண் போல உறுதியாக அதனை எதிர்கொண்டார். ஆனால், தற்போது ரவி அவருடைய பலத்தை இழந்து நிராதராவாக நிற்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ரவியின் மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்ட புள்ளியிலிருந்து பிரச்னை தொடங்கியது. ரவியின் குடும்பத்திற்கு அப்போதைய ஊர் நாட்டாமை கிருஷ்ணன் என்பவர் ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். ஊர் வழக்கத்துக்கு மாறாக ரவியின் மூத்த மகள் சியாமளா அதே ஊரை சேர்ந்த மற்றொரு இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்குதான் இந்த தண்டனை. தனது பேச்சைக் கேட்காமல் பாதை மாறி சென்ற மகளின் மீதிருந்த கோபத்தால், ரவி தனக்கும் தனது மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆகவே அபராதம் செலுத்த முடியாது என மறுத்துள்ளார். இது குறித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் எழுதி நாட்டாமை கிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார்.

புதிய நாட்டாமை... புதிய சிக்கல்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் நாட்டாமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்பிரமணியன், மீண்டும் ரவிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். எனவே ஊருடன் தகராறு வேண்டாம் என்ற எண்ணத்தில் ரவி 1500 ரூபாய் அபராதத்தை செலுத்தியுள்ளார். அபராதம் செலுத்திய பிறகும் ரவியின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளனர். இதற்கிடையில் தனது தந்தைக்கு எதிராக அவ்வப்போது கோயிலில் கூட்டம் கூட்டி சதித்திட்டம் தீட்டியதை, நேரில் கண்ட ரவியின் இளையமகள் பத்மபிரியா மனவேதனையில் கடந்த 2017இல் தற்கொலை செய்துகொண்டார்.

ஒரு மகளின் காதல் திருமணத்தால் பிரிந்து போன குடும்பம் மற்றொரு மகளின் இழப்பால் மீண்டும் கை கோர்த்தது. இறுதி சடங்குக்கு மூத்த மகள் வந்ததைக் காரணமாக வைத்துக்கொண்டு நாட்டாமை சுப்பிரமணியன் மீண்டும் ரவியிடம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தக் கட்டாயப்படுத்தி உள்ளார். இந்த முறையும் அபராதம் செலுத்த ரவி மறுத்துள்ளார்.

அவ்வப்போது ஊர் கூட்டம் நடைபெறும்போது கூட்டத்தில் கலந்துகொண்ட ரவி கோயில் நிர்வாக கணக்கு வழக்குகளை கேட்டுள்ளார். அதேபோல் ரவியின் சகோதரர் மதியழகனும் முன்னாள் நாட்டாமை என்ற முறையில் கோயில் கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிக்கும்படி வலியுறுத்தி வந்துள்ளார் ஆனால் நாட்டாமை போர்வையில் கோயில் நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி வந்த சுப்பிரமணியனுக்கு ரவி மற்றும் மதியழகன் செயல் கடுங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த நாட்டாமை மாற்றம்

சுப்பிரமணியனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் என்பவர் நாட்டாமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் ரவி குடும்பத்திடம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த சூழ்நிலைதான் கடந்த 27ஆம் தேதி நாட்டாமை ராஜகோபால் மதியழகனை தீர்த்துக்கட்ட தனது ஆதரவாளர்களுடன் முடிவு செய்தார். ரவி மற்றும் மதியழகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ராஜகோபால் உள்பட 12 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் மதியழகனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். தம்பியை தாக்கியவரைத் தடுக்கச் சென்ற ரவியையும் வெட்டியுள்ளனர். ஊருக்கு அபராதம் செலுத்தாத காரணத்தால் ஊர் நாட்டாமை ராஜகோபால் தரப்பினர்தான் திட்டமிட்டு தனது சகோதரரை கொலை செய்துள்ளதாக ரவி பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ரவியிடம் கேட்கையில், “எனது சகோதரர் இறுதி சடங்கு கூட ஊர் சார்பில் யாரும் வந்து கலந்து கொள்ளவில்லை. ஊரில் யாரிடமும் பேசக்கூடாது, ஒருவேளை பேசினால் அவர்களுக்கும் அபராதம் விதிப்பார்கள். இந்த பிரச்னை குறித்து பலமுறை அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்பு கூட அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் பேசியிருந்தோம். உடனே அவர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது” என விரக்தியுடன் பேசினார்.

மதியழகனின் மரணம் தனி மனித தாக்குதலாக அல்லாமல், ஊர் நாட்டாமை முறையினால் கிடைத்த ஆதிக்கத்தால் நிகழ்ந்துள்ளது. இந்த போக்கு கண்டிக்கத்தக்கதுதானே. இதை தடுப்பது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கேட்டபோது, ஊர் நாட்டாமை முறையால் கிராமத்தினர் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விவகாரத்தில் யார் மீது தவறு இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

இதனிடையே, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் நாட்டாமை ராஜகோபால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஊர் நாட்டாமை கட்டப்பஞ்சாயத்தால தனது இளைய மகளை பறிகொடுத்த ரவி, தற்போது தனது சகோதரரையும் பறிகொடுத்து கடும் மன வேதனைக்கு ஆளாகியுள்ளார்.

தொடர்ந்து பலியாகும் உயிர்கள்

கெளதமபுரியில் அரங்கேறி வரும் நாட்டாமை முறைக் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதா? என தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரை செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை. இதே போல் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் முருகையா பாண்டியனை தொடர்பு கொண்ட போது, ”இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை, இதில் நான் தலையிட முடியாது. ஊர் பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் ”என்றார்.

கண்டு கொள்ளாத அரசு இயந்திரங்கள்

இரண்டு உயிர்கள் பலியான பின்னரும்கூட ரவியின் குடும்பத்தினரை இன்று வரையில் ஊரிலிருந்து ஒதுக்கியே வைத்துள்ளனர், அக்கிராமத்தினர். ஊர் நாட்டாமை முறையால் ஒரு விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும்கூட, கொலைக்கான மூலகாரணமான நாட்டாமை முறையை ஒழிப்பதற்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பிலோ, மாவட்ட காவல்துறையினரோ ஊருக்கு சென்று விசாரணை நடத்தவில்லை. காலதாமதமான நீதிதான் குற்றமற்ற உயிர்களை காவு வாங்கிறது என்பதை அரசு இனியாவது புரிந்து கொள்ளுமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் ஊர் நாட்டாமை கொலை: புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details