தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலி அருகே தீண்டாமை கொடுமை.. ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 7:51 AM IST

Six people arrested the goondas act in tirunelveli: திருநெல்வேலி அருகே பட்டியல் சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமான தாக்குதல் நடத்திய ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Six people arrested the goondas act in tirunelveli
திருநெல்வேலி அருகே தீண்டாமை கொடுமை.. ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது..

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குளிக்கச் சென்று திரும்பியபோது, மது அருந்திக் கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டதோடு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

மேலும், அந்த இரண்டு இளைஞர்களையும் நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரமான முறையில் அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தவுடன், திருநெல்வேலி தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களும் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளது.

அந்த வகையில், தேசிய பட்டியல் இனத்தவருக்கான ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் மற்றும் ஆலோசகர் ராமசாமி ஆகியோர், சம்பவம் நடைபெற்ற முதல் இடத்திற்குச் சென்று சமீபத்தில் விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்களையும் நேரில் சந்தித்து, அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த பொன்னுமணி, முத்து என்ற நல்லமுத்து, லெட்சுமணகுமார், ஆயிரம், ராமர், சிவன் என்ற சிவா ஆகிய ஆறு பேரையும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ச.மகேஸ்வரி உத்தரவின்படி, குண்டர் சட்டத்தில் மாநகர காவல் துறை கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப் பந்துகள் தயாரிப்பு... தருமபுரி பள்ளி மாணவர்கள் சாதனை..!

ABOUT THE AUTHOR

...view details